சீன தங்க சுரங்கத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு! - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

சீன தங்க சுரங்கத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பத்து தொழிலாளர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

சீனாவின் கடலோர சாண்டோங் மாகாணத்தில் தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியமான கிக்ஸியாவில் உள்ள ஹுஷான் சுரங்கத்தில் ஜனவரி 10 ஆம் திகதி இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

இதனால் சுமார் 600 மீட்டர் (2,000 அடி) நிலத்தடியில் பணி புரியும் மொத்தம் 22 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்ட போதிலும் விபத்து நடந்த 7 நாட்களுக்கு பிறகே பூமிக்கு அடியில் 2,000 அடி ஆழத்தில் சுரங்க தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருக்கும் தகவல் மீட்பு குழுவுக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மீட்புக் குழுவினரின் அயராத முயற்சியால் விபத்து நடந்த 14 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அதன்படி நேற்று காலை மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் பெரிய துளை அமைத்து அதன் வழியாக பூமிக்கு அடியில் சென்று பார்த்தபோது, அங்கு மாயமான தொழிலாளர்கள் 10 பேரும் பிணமாக கிடப்பதை கண்டனர். இதையடுத்து மீட்புக் குழுவினர் அந்த 10 உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இவர்களுள் ஒரு தொழிலாளி தலையில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்திருந்தார்.

இதேவேளை விபத்தில் சிக்குண்ட மேலும் 11 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் சுரங்கத்தினுள் காணமல் போயுள்ளார். அவரை கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கையும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

மிகவும் மோசமான சுரங்க விபத்துக்கள் ஏற்படும் நாடுகளில் சீனாவும் ஒன்று. கடந்த ஆண்டு மாத்திரம் அங்கு ஏற்பட்ட சுரங்க விபத்துக்களில் மொத்தம் 573 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுரங்க பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad