1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டாலும், அதனை செயற்படுத்தும் அதிகாரம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கே உண்டு என்கிறார் உதய கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டாலும், அதனை செயற்படுத்தும் அதிகாரம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கே உண்டு என்கிறார் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டாலும், அதனை செயற்படுத்தும் அதிகாரம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கே உண்டு. சம்பள விவகாரம் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தாலும் அதனை செயற்படுத்தும் பொறுப்பு தோட்டக் கம்பனிகளுக்கு உண்டு. தோட்டக் கம்பனிகள் குறித்து கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கவே இதுவரையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் குறித்து தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கள்கள் மற்றும் தொழில் அமைச்சு என முத்துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தையில் எடுத்த தீர்மானங்கள் குறித்து எம்மால் தற்போது குறிப்பிட முடியாது. அந்த தீர்மானங்களை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா விரைவில் அறிவிப்பார்.

கேள்வி - இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதியின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும் என கடந்த வருடம் அறிவித்தீர்கள். ஆனால் அது பெறும் வாக்குறுதியாகவே காணப்படுகிறது. எனவே புதிய வருடம் ஆரம்பமானதுடன் அரசாங்கம் பெயில் என்ற சந்தேகம் எழுந்தள்ளது.?

பதில் - 1000 ரூபா சம்பளம் வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தை பெருந்தோட்டக் கம்பனிகள் செயற்படுத்த வேண்டும். இவ்விடயம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்ததை இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே கம்பனிகள் தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க எதிர்பாரக்கப்பட்டுள்ளது.

கேள்வி - இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்த கூட்டொப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், யார் இதற்கான பொறுப்பை ஏற்பது?

பதில் - பெருந்தோட்ட மக்களின் அடிப்படைச் சம்பளம் தொடர்பான பொறுப்பு மற்றும் அதிகாரத்தை எடுக்கும் பொறுப்பினை அரசாங்கம் தொழில் அமைச்சருக்கு வழங்கியுள்ளது. அவர் கலந்துரையாடலின் நிறைவிலேயே இந்த கலந்துரையாடலில் நிலை என்ன? தொடர்ந்து இந்த கலந்துரையாடலை முன்னெடுப்பதா? இது தொடர்பான இறுதித் தீர்மானம் என்ன என்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஊடாக அறிவிப்பார்.

எனவே தொழில் அமைச்சரின் தீர்மானத்தை அறிவிக்கும் வரை அது தொடர்பான மேலதிக தகவல்களை அவரால் மாத்திரமே வழங்க முடியும். ஏனெனில் அவரே அரசாங்கத்தின் பிரதிநிதியாக இக்கலந்துரையாடலில் தலைமை வகிக்கின்றார் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad