மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் பல தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ள சி.ஐ.டி. - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் பல தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ள சி.ஐ.டி.

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹர சிறைச்சாலையில், அண்மையில் ஏற்பட்ட களேபர நிலைமையின் பின்னணியில், இரு மனிதப் படுகொலைகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு முன்னெடுத்துள்ள விஷேட விசாரணைகளில் இது தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சிறைச்சாலையின் என் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ள குறித்த கைதி, தனது ஆதரவாளர்களுடன் சிறைச்சாலை வைத்தியசாலைக்குள் நுழைந்து அங்கிருந்த தாதி ஒருவர் உள்ளிட்ட இருவரை பணயம் பிடித்து, அங்கிருந்த 5 வகையான மருந்து வில்லைகளை கொள்ளையிட்டு, சிறைக் கைதிகளுக்கு பயன்படுத்த கொடுத்துள்ளதாக சி.ஐ.டி.யினருக்கு இதுவரையிலான விசாரணைகளில் தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் சி.ஐ.டி. பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸாவின் ஆலோசணைக்கு அமைய, பொலிஸ் அத்தியட்சர் ரந்தெனிய, உதவி பொலிஸ் அத்தியட்சர் உப்புல் செனவிரத்னவின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைக் குழு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றது.

இந்நிலையில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 120 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகளை தொடரும் சி.ஐ.டி., மேலதிக விசாரணைகளுக்காக விஷேட நிபுணர்கள் மற்றும் சுயாதீன சாட்சியாளர்களின் சாட்சியங்களையும் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது.

அதன்படி இந்த விசாரணைகளுக்கு 08 உத்தியோகத்தர்கள் மேலதிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதனிடையே, மஹர சிறை கலவரத்தில் உயிரிழந்த 11 பேரில் 7 பேர் நேற்று மாலை வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 3 ஆம் திகதி 31 மற்றும் 39 வயதான ஜா - எல களுபாலம மற்றும் வத்தளை - உனுபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையிலேயே மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஜா எல, ரத்துபஸ்வல, வத்தளை, எடேரமுல்ல, மினுவாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகள் மற்றும் பிரேதங்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள், எதிர்வரும் 11 ஆம் திகதி வத்தளை நீதிவானால் தீர்மானிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment