புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்வைத்தரும் - அலி ஸாஹிர் மௌலானா நம்பிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, December 30, 2020

புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்வைத்தரும் - அலி ஸாஹிர் மௌலானா நம்பிக்கை

கொவிட்-19 தொற்றுநோயினால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புதிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தீர்வைப் பெற்றுத்தருமென நம்புவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில், கொவிட்-19 இலங்கையில் பரவத்தொடங்கிய காலத்திலிருந்தே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதே வேளை, அடக்கம் செய்வது தீங்கு விளைவிக்குமென்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாம் அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்க விரும்பாதவர்கள் எனும் அடிப்படையில் ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டுமெனும் எமது செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவோமெனவும் கூறி வந்தோம்.

கடந்த 10 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 194 நாடுகளிலும் கொவிட்-19 காரணமாக மரணித்த சுமார் 1.5 மில்லியன் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறு அடக்கம் செய்வதன் மூலமாக தீங்கு விளைவிக்குமென எங்குமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதலில் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளானது, சர்ச்சைக்குரியவையாக, எந்தவித ஆதாரபூர்வமற்ற, நிரூபிக்க முடியாத அல்லது நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களற்றவையாக இருக்கின்ற காரணத்தினால், அப்பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்பது வெளிப்படையாக அறியப்பட்டதாலும், நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அதிகரித்து வருகின்ற தொடர் அழுத்தங்கள் காரணமாகவும், ஒரு புதிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டிய அவசியமேற்பட்டது.

முன்னைய பரிந்துரைகள் எதுவுமே வெளிப்படையாக அரசாங்கத்தால் மக்களது பார்வைக்கு முன்வைக்கப்படாததால், அவற்றை முஸ்லிம் சமூகத்தினால் ஏற்க முடியாதிருந்தது. அவர்களால் கொடுக்கப்பட்ட அறிக்கையானது, வெளிப்படையாக இருந்திருந்தால், அரசின் தீர்மானத்தோடு மக்கள் இணங்கியிருப்பார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள தரம் வாய்ந்த நிபுணர் குழுவானது, விஞ்ஞான ரீதியான காரணங்களின் அடிப்படையில் செயற்படுமென்பதில் எங்களுக்கு பூரண நம்பிக்கையிருக்கிறது. இந்த நிபுணர் குழாமினது ஆய்வுகள் முற்றிலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவையாகவும், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டலில் வைரஸ் தொற்றிய உடலங்களை அடக்கம் செய்வதானது, நிலத்தடி நீரைப்பாதிக்கும் ஆபத்தினை ஏற்படுத்தாதெனும் வகையிலே அமையுமென நான் நம்பிக்கை கொள்ள விரும்புகிறேன்.

இக்குழுவின் அறிக்கையானது இன்று புதன்கிழமை (30.12.2020) சுகாதார அமைச்சினூடாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இவ்வறிக்கை எந்தவிதமான கடைசி நேர மாற்றங்களோ, திருத்தங்களோ இன்றி முழுமையாகச் சமர்ப்பிக்கப்படுமென்று எதிர்பார்க்கிறேன். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்டையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் பிரகாரம் செயற்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

குறித்த நிபுணர் குழாமினது, அறிக்கையானது சுகாதார அமைச்சின் மூலமாகவோ அல்லது ஜனாதிபதி செயலகத்தின் மூலமாகவோ பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டுமென்பதையும் கவலையோடு வாழும் முழு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதுடன், துயரத்தோடும் வலியோடும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் அது ஆறுதலாக அமையுமெனவும் வேண்டிக் கொள்கிறேன்.

மேலும், இவ்வறிக்கையானது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே நிலவுகின்ற சந்தேகம் மற்றும் அச்சநிலைமையினைக் குறைக்கவும் இலங்கையிலே கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைத்து, அதனை இல்லாதொழிக்க நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படவும் ஏதுவாக அமையுமென எதிர்பார்க்கிறேன்.

எங்களது அடிப்படை உரிமையை மீட்டெடுப்பதற்காக கடுமையானதும் துயர் நிறைந்ததுமான மனக்குமுறல்களுக்கு மத்தியில் கடந்த பத்து மாதங்களாக நாங்கள் அனுபவித்து வந்த துயரங்களுக்குப் பின்னால் இறைவன் உதவியால் விஞ்ஞான ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் எங்களுக்கொரு ஆறுதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நம்பிக்கையினை இங்கு வெளிப்படுத்துகிறேன் என அலி ஸாஹிர் மௌலானா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad