முஸ்லிம்களின் ஜனாஸா விடயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது : முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

முஸ்லிம்களின் ஜனாஸா விடயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது : முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் முஸ்லிம்களின் உணர்வைப் புரிந்து, அவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நல்லதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது பற்றிய, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினுடைய நிலைப்பாடு குறித்து வெளியான அறிக்கை தொடர்பில் (27) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் முஸ்லிம்களின் உணர்வைப் புரிந்து, அவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலான ஒரு தீர்மானம் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்தவிடயம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அண்மையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அவர்களின் மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளை மதித்து, மிக விரைவில் நல்லதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் என்ற வகையில் கட்சியினுடைய நிலைப்பாட்டினை வரவேற்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி மீது இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்கள் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போதும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி பங்காற்றும் என நம்புகின்றேன்.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக பல்வேறு நிலைப்பாடுகள் உலக நாடுகள் மத்தியில் காணப்படுகின்றன. உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் உலகில் சுமார் 190 நாடுகளில் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றது. ஆனால் இலங்கையில் மாத்திரம் தகனம் செய்யப்படுகிறது. கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் வேதனையடைந்துள்ளது.

முஸ்லிமான ஒருவர் மரணிக்கின்ற போது, அவருடைய உடலை ஒருபோதும் தகனம் செய்ய முடியாது. அதற்கு மார்க்கத்தில் அனுமதியும் கிடையாது. இஸ்லாம் மார்க்கத்தின் பிரகாரம் ஜனாஸாவுக்குரிய முக்கிய கடமைகள் நிறைவேற்றப்பட்டு, அந்த உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். இந்த நாட்டிலே முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட போது, தகனம் செய்ய வேண்டாம் அடக்கம் செய்வதற்கு அனுமதி தாருங்கள் என முஸ்லிம் சமூகம் அரசாங்கத்திடம் மன்டியிட்டது. இந்தவிடயத்தில் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் கூட இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இவற்றையெல்லாம் புறந்தள்ளி தொடர்ந்தும் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதனை கன்டித்தும், அடக்கம் செய்யக் கோரியும் கடந்த சில நாட்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு சமூகத்தின் உரிமைப் போராட்டம் என்ற ரீதியில் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அதற்குப் பெரும் ஆதரவு கிடைத்து வருகின்றது. இவற்றை அரசாங்கம் கருத்திற்கொள்ளாது செயற்படுமாயின் எமது நாடு சர்வதேச ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அதுமாத்திரமல்ல முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் இல்லாமல் போகும்.

எனவே, அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களை பின்பற்றி, முஸ்லிம்களுடைய மத நம்பிக்கை மற்றும் உணர்வுகளை கருத்திற்கொண்டு, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுபைர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment