போதைக்கு அடிமையான கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் - மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, December 7, 2020

போதைக்கு அடிமையான கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் - மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிப்பு

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

சிறைச்சாலையில் இருக்கும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தனவினால் இன்று கையளிக்கப்பட்டது. 

அறிக்கைகயை பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் இ்டம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நீதி அமைச்சினால் நாங்கள் விசாரணை குழு ஒன்றை அமைத்திருந்தோம். அதன் இடைக்கால அறிக்கையே தற்போது கிடைக்கப் பெற்றிருக்கின்றன. ஒரு மாத காலத்தில் இதன் பூரண அறிக்கையை கையளிக்குமாறு கோரி இருக்கின்றேன். 

அத்துடன் கொவிட் 19 இரண்டாம் அலை சிறைச்சாலைக்குள் பரவிய பின்னர் 2020 ஒக்டோபர் 12ஆம் திகதியாகும் போது சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகள் 32 ஆயிரத்தி 200 பேர் இருந்தார்கள். என்றாலும் கடந்த 5 ஆம் திகதியாகும் போது அதனை 26 ஆயிரத்தி 364 வரை குறைத்துக் கொள்ள முடியுமாகி இருக்கின்றது. 

குறுகிய தினத்துக்குள் 6 ஆயிரம் பேரை விடுவித்திருக்கின்றோம். மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதே எமது நோக்கமாகும். 

சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு முகாம்கள் அமைத்து, விசேடமாக போதைக்கு அடிமையாகி இருப்பவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad