2025 இல் தேசிய வருமானத்துக்கு 10 டொலர் பில்லியன்களை இணைத்துக் கொள்வதே எமது இலக்கு - கொரோனாவுடன் வாழ வேண்டும் எனும் பிரகாரம் சுற்றுலாப் பயணிகளை அழைக்க திட்டம் : பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

2025 இல் தேசிய வருமானத்துக்கு 10 டொலர் பில்லியன்களை இணைத்துக் கொள்வதே எமது இலக்கு - கொரோனாவுடன் வாழ வேண்டும் எனும் பிரகாரம் சுற்றுலாப் பயணிகளை அழைக்க திட்டம் : பிரசன்ன ரணதுங்க

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

சுற்றுலாத் துறையின் மூலம் 2025ஆம் ஆண்டாகும் போது தேசிய வருமானத்துக்கு 10 டொலர் பில்லியன்களை இணைத்துக் கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு. அதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் கொவிட் காரணமாக ஓரளவு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது என சுற்றுலாத் துறை விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டுக்கு அதிகளவான அன்னியச் செலாவணியை பெற்றுக் கொடுக்கக் கூடிய துறையாக சுற்றுலாத் துறை காணப்படுகின்றது. தற்காலத்தில் மிகவும் சவாலுடனே இத்துறையை கொண்டுசெல்ல வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்கின்றது. 

ஜனாதிபதியின் செளபாக்கிய நோக்கில் சுற்றுலாத் துறை மூலம் 2025 இல் நாட்டின் தேசிய வருமானத்துக்கு 10 டொலர் பில்லியன்களை சேர்ப்பதாகும். அதற்கான வேலைத் திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் உலக தொற்று நோயான கொரோனா காரணமாக சுற்றுலாத் துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இருந்தபோதும் கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர சுகாதார வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறையின் அனுமதி கிடைத்ததுடன் விமான நிலையத்தை திறந்து சுற்றுலாப் பயணிகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். 

அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் எமது நாட்டுக்கு 5 இலட்சத்தி 7 ஆயிரத்தி 311 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனை தொடர்ந்திருந்தால், வருடத்துக்கு 7 இலட்சம் சுற்றுலா பயணிகளை கொண்டுவரும் எமது இலக்கை அடைந்திருக்க முடியும். என்றாலும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் எமது நாடு சுற்றுலாத்துறைக்கு மிகவும் கவர்ச்சிகரமான நாடாகும். என்றாலும் 30 வருட கால பயங்கரவாத யுத்தம் காரணமாக நாங்கள் 30 வருடம் பின்னுக்கு சென்றோம். சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தன. 

அன்று தமிழ் தலைவர்கள் யுத்தத்தை வைத்து பிழைப்பு நடத்தினார்கள். தற்போதும் இங்கு கதைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு கடந்து வாழ்பவர்களின் பணத்துக்காகவும் அவர்களின் நோக்கத்துக்காகவும் செயற்படுகின்றனர். இதனை கைவிட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும். அதற்கான சூழல் இருக்கின்றது என்றார்

No comments:

Post a Comment