PHI மாரின் எச்சரிக்கைக்கு உடனடி நடவடிக்கை அவசியம் - ஆபத்தான நிலை என அரச மருத்துவர் சங்கம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

PHI மாரின் எச்சரிக்கைக்கு உடனடி நடவடிக்கை அவசியம் - ஆபத்தான நிலை என அரச மருத்துவர் சங்கம் தெரிவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சூழ்நிலை எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமை ஆபத்தானதென அரசாங்க மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை உயரதிகாரிகள் அது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமென்றும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் ஆஸ்பத்திரிகளில் கொரோனா உப கொத்தணிகள் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது அவசியமென்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

சங்கத்தின் இணைப்புச் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே இது தொடர்பில் தெரிவிக்கையில் அடிமட்டத்திலிருந்து நோயாளர்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு தொழில்நுட்ப செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடுபவர்களே பொதுச் சுகாதார சேவை பரிசோதகர்கள்.

எனினும் நாட்டின் சில பகுதிகளில் தமது கட்டுப்பாட்டையும் மீறி கொரோனா வைரஸ் அதிகரிப்பு காணப்படுகின்றதென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இது மிக மோசமான ஒரு நிலையாகும். அதனை நிவர்த்தி செய்வதற்கு உடனடி செயற்பாடுகள் அவசியமாகும்.

குறிப்பாக கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் இவ்வாறான நிலை இருக்குமானால் அந்த நிலைமையை சரி செய்வது சுகாதாரத் துறையில் அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிகளின் பொறுப்பாகும்.

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

தேவையான வளங்களையும் ஆளணிகளையும் அவர்களுக்கு உடனடியாக பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை அலட்சியம் செய்து விட்டு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது.

அதேவேளை ஆஸ்பத்திரி துறையில் கொரோனா உப கொத்தணிகள் உருவாவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சம்பந்தட்ட அதிகாரிகள் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment