கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கொரோனா எவ்வாறு தடையாகவுள்ளது? - மாநகர சபை உறுப்பினர் ராஜன் கேள்வி - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கொரோனா எவ்வாறு தடையாகவுள்ளது? - மாநகர சபை உறுப்பினர் ராஜன் கேள்வி

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கொரோனா அனர்த்தம் எனக்கூறி மீள்குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள். பாராளுமன்றத்தைக் கூட்டுகின்றனர். அபிவிருத்தியைச் செய்கின்றனர். ஆனால், வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கொரோனா எவ்வாறு தடையாகவுள்ளது கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் அம்பாறை மாவட்டம் தனியார் விடுதியொன்றில் செவ்வாய்க்கிழமை (17) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், எமது நாட்டில் இரு வேறு தேர்தல்கள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளன. இத்தேர்தல்களில் எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதில், தற்போதைய பிரதமரின் இணைப்புச்செயலாளர் கருணா அம்மான் தேர்தல் முடிவுற்றதும் 3 மாதத்தினுள் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். 

இது தவிர, பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அம்பாறை மாவட்டத்திற்கு இனி வரமாட்டேன் எனக் கூறியிருந்தார். ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களை அநாதையாக்கி வாக்குறுதியை மீறியுள்ளார்.

இவர் அம்பாறைக்கு வருகை தருகின்ற போது, பொய் மூட்டைகளுடன் தான் வருகின்றார். சொல்வதும் பொய் கூட. இவ்வாறு நாங்கள் கூறுவதற்குக் காரணம் எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதனாலாகும்.

இந்த வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு யாரும் எவருக்கும் தடையாக இருக்கத் தேவையில்லை. இவ்விடயம் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினையாகும். முஸ்லிம் மக்கள் இவ்விடயத்தினால் பாதிக்கப்படப்போவதில்லை. இதனூடாக முஸ்லிம் மக்களை அடக்கியாள வேண்டுமென்ற நோக்கமல்ல என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்விடயத்தை அரசியலாக்க அரசியல்வாதிகளே முயல்கின்றனர். முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி உண்ணாவிரதம் செய்த போது அங்கு கணக்காளர் நியமனம் தொடர்பில் ஆராயப்பட்டு பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்னும் அதனைச் செய்வதற்கு பிரதமரின் இணைப்புச் செயலாளர் கருணா அம்மான் மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பிள்ளையான் ஆகியோர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்.

இவ்விடயம் தொடர்பில் இனி வருங்காலங்களில் உண்ணாவிரதம் மேற்கொள்வது சிந்திக்க வேண்டியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு செய்ய முடியாது. இருந்த போதிலும், அரசாங்கத்தடன் இணைந்துள்ள எமது அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் முக்கிய நடவடிக்கை எடுங்கள். 

அதற்காக நாங்கள் உங்களை வழிநடத்துவோம். இவ்வாறு செயற்படத் தயங்குவார்களாயின், எதிர்காலத்தில் மக்கள் அவர்களுக்குச் சரியான தீர்ப்பை வழங்குவார்கள். எமது மக்களுக்காக உண்ணாவிரதமல்ல எந்தவொரு போராட்டத்தையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.

ஊடகவியலாளர்கள் எப்போது கல்முனைப் பிரச்சினை தீரக்கப்படுமென கேள்வி கேட்கும் போது, தமிழ் மக்களை முட்டாளாக்கும் பதில்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா அனர்த்தம் முடிந்தால் தான் கல்முனை பிரச்சினைக்குத்தீர்வு பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், கொரோனா அனர்த்தம் எனக்கூறி மீள்குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள்.

பாராளுமன்றத்தைக் கூட்டுகின்றனர். அபிவிருத்தியைச் செய்கின்றனர். ஆனால், வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கொரோனா எவ்வாறு தடையாகவுள்ளதெனக் கேட்க விரும்புகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad