பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னெடுக்கவும் - அபாயமற்ற சூழலை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னெடுக்கவும் - அபாயமற்ற சூழலை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல்

2020ஆம் ஆண்டு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (23) பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னெடுக்குமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மீளத் திறக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளில் முறையான டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, அவர் தெரிவித்தார்.

மாணவர்கள், பெற்றோர், பாடசாலை சமூகம் ஆகியோர் ஒன்றிணைந்து பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளை அண்டிய சுற்றுப்புறச்சூழலை துப்புரவு செய்யுமாறும், அவர் அறிவித்துள்ளார்.

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துமாறும், டெங்கு அபாயமற்ற சூழலை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், பாடசாலை அதிபர்களை அவர் கேட்டுள்ளார்.

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு பணிகளை கண்காணிக்குமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளை பணித்துள்ளதாகவும், அவர் கூறினார்.

பாடசாலைகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதையடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகாரித்துக் காணப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்

அத்துடன் பாடசாலைகளில் காணப்படும் நீர்த்தாங்கிகள், குடிநீர் கிணறுகள் போன்றவையும் சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர் - எம்.எஸ்.எம். ஹனீபா)

No comments:

Post a Comment