வெளிநாடுகளில் பணி புரியும் காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - நிமல் சிறிபாலடி சில்வா - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

வெளிநாடுகளில் பணி புரியும் காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - நிமல் சிறிபாலடி சில்வா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் நெருக்கடி நிலைமையில் வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவர்களின் சேவைக் காலத்தில் அந்தந்த நாடுகளிலேயே வைரஸ் தொற்று நோய் காரணமாக உயிரிழக்க நேர்ந்திருந்தால் இறந்தவரின் உறவினர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும், அவ்வாறு வெளிநாடுகளில் இதுவரையில் 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா  தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, வாய்மூல வினாக்கான விடை நேரத்தில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்தும், கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமையில் அரசாங்கம் அவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிகைகள் என்னவென்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது 2020.11.13 ஆம் தினத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இதுவரையில் வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 16 ஆயிரத்து 433 ஆகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோல் வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்கள் தாம் பணிபுரியும் காலத்தில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கைக்கு திரும்பியிருந்தால் அவர்களுக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நட்டஈடு பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. மருத்துவ செலவுகள் மற்றும் விமானச் சீட்டுகளுக்கான செலவுகள் என்பனவும் பெற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு 102 கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

அதேபோல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் அனுமதி வழங்கப்பட்டு உரிய காரியாலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள காசோலைகளின் எண்ணிக்கை 49 ஆகும். இவற்றின் பெறுமதியானது 23 இலட்சத்து 8 ஆயிரத்து 228 ரூபாவாகும்.

அதேபோல் பணியாளர் தனது சேவைக் காலத்தில் அந்தந்த நாடுகளிலேயே உயிரிழக்க நேர்ந்திருந்தால் இறந்தவரின் உறவினர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு வெளிநாடுகளில் பணி புரியும் 68 இலங்கையர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கான நட்டஈடுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இவ்வாறு உயிரிழந்துள்ள இலங்கையர்களின் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்கும் விதமாக வழங்கப்படும் இறுதிக் கிரியைகளுக்கான நிதியாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. அதற்கென மொத்தமாக 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பணி புரியும் காலம் முடிந்தும் அவர்கள் இலங்கைக்கு வர முடியாமல் இருந்த காலப்பகுதியில் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக மரணித்த ஆறு பணியாளர்களின் பெயர்கள் கிடைத்திருப்பதுடன் அவர்களுக்கும் நட்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு ஒரு நபருக்கு மூன்று இலட்சம் என்ற ரீதியில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கொவிட்-19 வைரஸ் தொற்றுப்பரவலை அடுத்து பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் 13 ஆயிரம் பேர் நாடுதிரும்பியுள்ளர். இவர்களில் மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பவர்கள், தேசிய வியாபாரங்களில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டிருப்பவர்கள் என சகலரையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்கவும் தயாராக உள்ளோம்.

அதேபோல் தற்போதுள்ள நிலைமைக்கு அமைய 14 நாடுகளில் உள்ள 11 ஆயிரத்து 276 இலங்கையர்களை வரவழைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக வெளிநாட்டவர்களை ஒரேடியாக இலங்கைக்கு வரவழைக்க முடியாது என்றார்

No comments:

Post a Comment

Post Bottom Ad