மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள் - கோப் குழு கூட்டத்தில் அம்பலம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள் - கோப் குழு கூட்டத்தில் அம்பலம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பாராளுமன்றத்தில் நேற்று (20) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் (CoPE) அம்பலமாகியுள்ளது.

இந்த நெடுஞ்சாலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக மாத்திரம் 1.7 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாக இங்கு உறுதியானது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டமான கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகள் 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தாமதமானமையால் 8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

இதில் முதலாவது சாத்தியக்கூறு ஆய்வுக்காக SMEC நிறுவனம் கொள்முதல் நடைமுறைகளுக்கு அப்பால் தெரிவு செய்யப்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்தது. 

அத்துடன், 2012ஆம் ஆண்டு வடக்கு அதிவேக நெடுஞ்சாலை என மூன்று கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டம் 2015 ஆண்டாகும் போது நான்கு கட்டங்களைக் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய என்டேரமுல்ல முதல் மீரிகம வரையும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நெடுஞ்சாலையை கடவத்தையிலிருந்து அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இந்தத் தீர்மானம் காரணமாக மீண்டும் சாத்தியகூறு ஆய்வுகள் சிலவற்றுக்காக பெருந்தொகை பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. 

2015ஆம் ஆண்டு எந்தவொரு முறையான நிபுணத்துவ ஆலோசனையும் இன்றி அமைச்சரவையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.

அசல் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால் ஏற்பட்ட நிதி இழப்புக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு நேற்று (20) கூடியிருந்ததுடன், இதில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, ஜகத் புஷ்பகுமார, பிரேம்நாத்.சி.தொலவத்த, ரஞ்சன் ராமநாயக்க, டி.வி.சானக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தையிலிருந்து மீரிகம வரையான பகுதி வடக்கு அதிவேக நெடுஞ்சாலை என்ற பெயரிலிருந்த திட்டத்தில் பொத்துஹர முதல் ஹீன்தெனிய வரையில் கட்டுமானங்களை மேற்கொள்ள கொள்முதல் நடைமுறையையும் மீறி MCC என்ற சீன நிறுவனத்தைத் தெரிவு செய்ய 2015 இல் அமைச்சரவை தீர்மானம் எடுத்ததாகவும் இங்கு வெளிப்பட்டது.

இதற்காக 159 மில்லியன் ரூபா நிதி செலவு செய்யப்பட்டதுடன், பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழு இது பற்றிய தீர்மானத்தை எடுத்ததுடன், கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை காரணமாக இப்பகுதிக்கான கட்டுமானப் பணிகள் 04 வருடங்கள் தாமதமடைந்து. 

2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இங்கு வெளிப்பட்டது. இந்த காலதாமதத்தினால் ஏறத்தாழ 8 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கோப் குழு விசாரணைகளின் போது புலப்பட்டது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டமாண பொத்துஹர முதல் கலகெதர வரையிலான பகுதியின் கொள்முதல் செயற்பாடுகளில் காணப்பட்ட மோசடிகள் காரணமாக கொள்முதல் செயற்பாடுகள் பூர்த்தியடையவில்லை. 

விலைமனுக் கோரலுக்கு அமைய MS Taisei என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டியிருந்தபோதும் Fujita என்ற நிறுவனத்துக்கு இதனை வழங்க பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் அழுத்தம் இருந்ததால் கொள்முதல் செயற்பாடுகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் இங்கு வெளிப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுபோன்ற குழு இருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லாதபோதும், பில்லியன் பெறுமதியான கொள்முதல் செயற்பாடுகளில் தொடர்புபடுவதால் இது நாட்டின் நிதி ஒழுக்கத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கோப் குழுவின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

பொருளாதர முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழு சில சந்தர்ப்பங்களில் எழுத்துப்பூர்வமாக செல்வாக்கு செலுத்தியது என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும், கண்காணிப்பதற்கும், ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அமைக்கப்படும் குழுக்கள் கொள்முதல் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவது ஒரு பெரிய பிரச்சினை என்றும் அவர் கூறினார். 

எனவே, கொள்முதல் செயற்பாடுகளுக்கு ஏற்ப இந்த அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்காலப் பணிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் தலைவர் வலியுறுத்தினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்தும் கோப் தலைவர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். 

கடவத்தை முதல் மீரிகம வரையில் 5% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், மீரிகம முதல் குருநாகல் வரையிலான இரண்டாவது கட்டத்துக்கான பகுதியில் 75% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. 

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அதேநேரம், பொத்துஹரவிலிருந்து கலகெதர வரையிலான பிரிவுக்கு கொள்முதல் செயல்முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டு பணிகளைத் தொடங்க முடியும் என்றும் திட்டப் பணிப்பாளர் கூறினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது, மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களின் முன்னேற்றம் குறித்து முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கவும் குழு பரிந்துரைத்தது.

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக ஏறத்தாள 284 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இங்கு தெரியவந்தது. 

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளில் சில தற்போதைய அதிவேக நெடுஞ்சாலைக்குப் பயனற்றவையாகக் காணப்படுகின்றன என்று வருத்தம் தெரிவித்த தலைவர், எதிர்கால நிதி நடவடிக்கைகள் அனைத்தையும் நிர்வகிப்பது முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்தத் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளும் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எந்தளவு பயனுள்ளவை என்பது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோப் குழுவின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

No comments:

Post a Comment