சாரதிகள் அவ்வப்போது மாறினாலும் பேருந்தோ பாதையோ மாறவே இல்லை, இந்த அரசாங்கம் டைட்டானிக் கப்பலில் இசைக்கப்பட்ட "பாண்ட் வாத்தியம் ' போன்றது : சபையில் அனுரகுமார - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

சாரதிகள் அவ்வப்போது மாறினாலும் பேருந்தோ பாதையோ மாறவே இல்லை, இந்த அரசாங்கம் டைட்டானிக் கப்பலில் இசைக்கப்பட்ட "பாண்ட் வாத்தியம் ' போன்றது : சபையில் அனுரகுமார

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தில் நாட்டினை மீட்டெடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் வகுக்கவில்லை, சர்வதேச கடன்களை மேலும் அதிகரிக்கும் கொள்கையையே அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டுக்கான கடனாக 6.1 ட்ரில்லியன் ரூபா கடனை பெற்றுக் கொண்டு நாட்டினை மேலும் கடன் நெருக்கடியில் தள்ளவே தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் இறுதி விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், முன்னைய ஆட்சியாளர்கள் இப்போதுள்ள ஆட்சியையும், இந்த ஆட்சியாளர்கள் முன்னைய ஆட்சியையும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் அனைவராலும் நீண்ட காலமாக நாட்டின் பொருளாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது. இரண்டு சாரதிகள் மாறி மாறி ஒரே பாதையில் பயணிக்கும் பேருந்தை ஓட்டுகின்றனர். சாரதிகள் அவ்வப்போது மாறினாலும், பேருந்தோ, பாதையோ மாறவே இல்லை. எமது நாட்டின் சகல துறைகளும் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

எமது தேசிய உற்பத்திகள் முழுமையாக அழிக்கப்பட்டு அனைத்துமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் தேசிய வருமானம் 24 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் எமது நாட்டின் செலவுகள் அளவுக்கு அதிகமாகியுள்ளன. வருமானத்தை விடவும் செலவு 68 வீதத்தால் அதிகரித்துள்ளது. 

அரச நிறுவனங்கள் 52 இல் 31 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரச நிறுவனங்கள் கண்டுள்ள நட்டம் 80 பில்லியன் ரூபாவாகும். அடுத்த நான்கு மாதங்களையும் கருத்தில் கொண்டால் 120 பில்லியன் ரூபாய்களை அண்மித்த தொகையை காண்பிக்கும்.

மூன்று அல்லது நான்கு மாதங்களில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காண்கின்றது என்றால், இந்த நாட்டில் 70 ஆண்டுகால பொருளாதார கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது. பாத்திரத்தில் ஒன்றுமே இல்லாத நிலையில்தான் வறுமை வரும் போது பாதிப்பு வரும் என்ற உதாரணத்தை இதற்கு பொருத்திப்பாருங்கள்.

அரச நிறுவனங்களை மீட்டெடுக்க அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் வகுக்கவில்லை, அதேபோல் ஏற்றுமதி இறக்குமதியில் 8 பில்லியன் ரூபா இடைவெளி காணப்படுகின்றது. நாட்டின் ஏற்றுமதி குறைவடைந்துள்ளது. சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாப்புகள் மூலமாக வரும் வருமானம் குறைவடைந்துள்ளது. இப்போதே 40 ஆயிரம் பேர் தொழிலை கைவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் கடன் நெருக்கடி இந்த நாட்டின் பிரதான நெருக்கடியாக மாறியுள்ளது. நாட்டின் ஏனைய சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அனைத்தும் இறுதியாக கடன் நெருக்கடியில் வந்து சேரும். 2013 ஆம் ஆண்டில் எமது நாட்டின் கடன் தொகை 13 ட்ரில்லியன் ரூபாவாக இருந்தது.

2020 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டுள்ள கடன்களுடன் 15 ட்ரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான கடன்களையும் இணைத்துப் பார்த்தால் இந்த கடன் தொகை எம்மால் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தும். 

2020 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட கணக்குகள் அனைத்துமே தவறானது. 2020-2021 ஆம் ஆண்டுக்காக 6.1 டிரில்லியன் ரூபா கடன் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இந்த நாட்டின் மொத்த வருமானம் 80 பில்லியன் ரூபாவாக உள்ள நிலையில் 6 ட்ரில்லியன் கடன்களை பெற்றுகின்றோம்.

2020 ஆம் ஆண்டிற்கு 1,854 பில்லியன் ரூபா கடன் மற்றும் வட்டியாக செலுத்தப்படவுள்ளது. ஆனால் ஆண்டுக்கான வருமானம் 1,555 பில்லியன் ரூபாவாகும். வருமானத்தை விடவும் கடன்கள் அதிகரித்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் 2,117 பில்லியன் ரூபாவை கடன் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் ஆண்டுக்கான வருமானமான 1994 பில்லியன் ரூபாவே கிடைக்கும்.

ஆகவே அரச வருமானம் கடன்களை செலுத்த போதுமானதாக இல்லை. கடன்களை மாத்திரமே செலுத்தினால் ஏனைய துறைகளை எவ்வாறு மீட்டெடுப்பது. எமது நாட்டின் மொத்த கடன்களில் 44 வீதம் சர்வதேச கடன்களாகும். இவற்றை விரைவாக செலுத்தியாக வேண்டும். 

எனவே நாடு பாரிய கடன் நெருக்கடியில் வீழ்ந்துள்ளது. அரச நிறுவனங்களின் கடன் 1.3 ட்ரில்லியன் ரூபாவாகும். அரச திறைசேரி 500 பில்லியன் வங்கி மிகப்பற்றில் செல்லுகின்றது. நாட்டின் பிரதான கடனாளி அரசாங்கமாகும்.

ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். டைட்டானிக் கப்பம் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இவ்வாறு மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் முழுமையாக மூழ்க இரண்டு மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களும் எடுத்தன. இந்த இரண்டுமணி நாப்பது நிமிடங்களும் கப்பலில் இருந்த "பாண்ட் வாத்தியம்" இசைக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அதேபோன்றுதான் இந்த அரசாங்கமும் டைட்டானிக் கப்பலில் இசைக்கப்பட்ட "பாண்ட் வாத்தியம் ' போன்றது என்றார்.

No comments:

Post a Comment