சமூக வலைத்தளம், எதிர்க்கட்சிகளின் கருத்துதான் நாட்டு மக்களின் எண்ணம் என்பதை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

சமூக வலைத்தளம், எதிர்க்கட்சிகளின் கருத்துதான் நாட்டு மக்களின் எண்ணம் என்பதை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் - மனுஷ நாணயக்கார

(செ.தேன்மொழி) 

கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலையை துரிதமாக வெற்றி கொண்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் கூறினார். இன்று வரையிலும் வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இன்னமும் முதலிடத்தில்தான் இருந்திருப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் எமது பொறுப்பை நாம் நிறைவேற்றியுள்ளோம். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டியமையினாலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது 'நான் சித்தியடையவில்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று அவரே கூற வேண்டி ஏற்பட்டது.

கோத்தாபய ராஜபக்ஷ என்ற தனி நபரின் தோல்வி தொடர்பில் எமக்கு சிக்கல் இல்லை. ஆனால் முழு நாடுமே இன்று பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலைமை எதிர்வரும் காலத்திலாவது மாற்றமடைய வேண்டும். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலையை துரிதமாக வெற்றி கொண்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் கூறினார். இன்று வரையிலும் வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இன்னமும் முதலிடத்தில்தான் இருந்திருப்போம்.

இரு தடவைகள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தாகவும் ஜனாதிபதி கூறினார். ஆனால் அரிசிக்கே இன்னும் நிர்ணய விலை அறிவிக்கப்படவில்லை என்றும், அவரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் மீள பெறப்பட்டமை இன்னும் மறக்கப்படவில்லை என்றும் நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

புதிதாக ஒளடத உற்பத்திகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத் திட்டங்களையே ஜனாதிபதி தற்போது மீள ஆரம்பித்திருக்கிறார். 

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தனக்கு எதிராக எதிர்த்தரப்பிலிருந்தும் சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறுகின்றார். ஆனால் சமூக வலைத்தளம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துதான் நாட்டு மக்களின் எண்ணம் என்பதை அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment