கறுவாத்தோட்டம் வாகன காட்சி அறை விபத்து : சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மகளுக்கு பிணை - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

கறுவாத்தோட்டம் வாகன காட்சி அறை விபத்து : சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மகளுக்கு பிணை

(எம்.எப்.எம்.பஸீர்) 

அபாயகரமாக வாகனம் செலுத்தி, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள நந்த மோடார்ஸ் எனும் வாகன காட்சி அறைக்கு கடுமையான சேதங்களை விளைவித்த குற்றச்சாட்டுக்கு உள்ளான, நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மகளை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேக நபரான ரொஷானி மதூஷா ரத்நாயக்க எனும் யுவதி, இன்று சட்டத்தரணி ஊடாக மன்றில் ஆஜரான நிலையிலேயே, கொழும்பு மேலதிக நீதிவான் ஹிரோஷி காஹிங்கல இந்த உத்தர்வைப் பிறப்பித்தார்.

இதன்போது மன்றுக்கு விடயங்களை முன்வைத்த கறுவாத்தோட்டம் பொலிஸார், சந்தேக நபரான யுவதிக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் கூட இருக்கவில்லை என்பது விபத்தையடுத்தான விசாரணைகளில் தெரியவந்ததாக கூறினர்.

இதனையடுத்து சந்தேக நபரான யுவதி சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண, 19 வயதான தனது சேவை பெறுநர், தனியார் பல்கலைக்கழகமொன்றில் வியாபார முகாமைத்துவம் தொடர்பில் கற்கைகளை முன்னெடுக்கும் நிலையில், வாகனம் செலுத்த பயின்று வருவதாக கூறினார்.

அவ்வாறு பயிற்சிகளின் போதே, தனது தோழி ஒருவரின் வாகனத்தை அவர் செலுத்தியுள்ளதுடன், பிரேக்கிற்கு பதிலாக எக்ஸிலேடரை அழுத்தியதன் விளைவாக அந்த விபத்து நேர்ந்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த விபத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடி, இழப்பீடு தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வர தாம் தயார் எனவும் அஜித் பத்திரண சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், சேதமடைந்த வாகன விற்பனை காட்சியறை சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்த விபத்தினால், தமக்கு 200 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் பொருத்தமான இழப்பீட்டை எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த யுவதி செலுத்திய வாகனத்தின் உரிமையாளர், விபத்தில் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் 350 இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையிலேயே அனைத்து விடயங்கலையும் ஆராய்ந்த நீதிவான் ஹிரோஷி காஹிங்கல சந்தேக நபரான யுவதியை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்து வழக்கை எதிர்வரும் 2021 மார்ச் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad