முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப்புடனான பொலிஸ் சீருடையை அறிமுகம் செய்தது நியூசிலாந்து அரசு - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப்புடனான பொலிஸ் சீருடையை அறிமுகம் செய்தது நியூசிலாந்து அரசு

முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப்புடனான உத்தியோகபூர்வ பொலிஸ் சீருடை நியூசிலாந்து பொலிஸ் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சர்ச் மாகாணத்தில் உள்ள 2 பள்ளிவாசல்களில் கடந்த ஆண்டு மார்ச் 15ம் திகதி முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில், அந்த இரண்டு பள்ளிவாசல்களுக்குள்ளும் துப்பாக்கியுடன் நுழைந்த பிரென்டன் டாரண்ட் என்ற வெள்ளை நிற வெறியை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாதி தொழுகையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான்.

ஒரு பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திவிட்டு காரில் பயணம் செய்து அடுத்த பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் பதிவிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நிற வெறி வாதி டாரண்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளான்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் உள்ள தங்கள் சமூகத்தினருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அந்நாட்டு பொலிஸ் துறையில் செனா அலி (30) என்ற முஸ்லிம் பெண் இணைந்தார். அவர் தற்போது நியூசிலாந்து பொலிஸ் துறையில் கான்ஸ்டெபிலாக பதவி வகிக்கிறார். 

இந்நிலையில், கிரிஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்களுடன் நல்லுணர்வை அதிகரிக்கும் வகையில் நியூசிலாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக நியூசிலாந்து பொலிஸ் துறையில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், அத்துறையில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப்புடனான உத்தியோகபூர்வ பொலிஸ் உடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

முஸ்லிம் பெண்கள் நியூசிலாந்து பொலிஸ் துறையில் அதிக அளவில் சேர வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் ஹிஜாப்புடனான உத்தியோகபூர்வ ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹிஜாப்புடனான உத்தியோகபூர்வ ஆடையை அணித்த செனா அலி-யின் புகைப்படத்தை நியூசிலாந்து பொலிஸ் துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad