மக்கள் கோத்தா பைல் என ஏன் தெரிவிக்கின்றனர் - பாராளுமன்றத்தில் காரணத்தை வெளியிட்டார் கபீர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 12, 2020

மக்கள் கோத்தா பைல் என ஏன் தெரிவிக்கின்றனர் - பாராளுமன்றத்தில் காரணத்தை வெளியிட்டார் கபீர் ஹாசிம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

இலங்கை வரலாற்றில் இந்த வருடமே அதிகூடிய கடன் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் 100 நாட்களில் செய்த வேலைத்திட்டங்களைக்கூட 365 நாட்களாகியும் அரசாங்கத்துக்கு செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அதனால்தான் மக்கள் கோத்தா பைல் என தெரிவிக்கின்றனர் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2020ஆம் வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாகவே ஒரு வருடத்தில் இரண்டு வரவு செலவு திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றது. அரசாங்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆட்சி பொறுப்புக்கு வந்து, அமைச்சரவையையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்துக்கு 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒன்றை தயாரித்து சமர்ப்பித்துக் கொள்ள முடியாமல் போயிருக்கின்றது.

ஆனால் 2015 இல் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நாங்கள் பெரும்பான்மை இல்லாத நிலையில் 100 நாட்களில் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்தோம். அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொண்டோம். எரிவாயு, பெற்றோல் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தோம். 

ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 365 நாட்களாகியும் என்ன செய்தது என்று முடியுமானால் தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் வரவு செலவு திட்டத்தையேனும் சமர்ப்பிக்க முடியாமல் போயிருக்கின்றது. அதனால்தான் மக்கள் கோத்தா பைல் என தெரிவிக்கின்றனர்.

மேலும் எந்தவொரு அரசாங்கமும் அந்த நிதியாண்டுக்குரிய செலவை ஆண்டின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பிரதமர் இந்த வருடத்துக்கு அரசாங்கத்தினால் செலவழிக்கப்பட்ட நிதிக்கு அனுமதியை தருமாறே கேட்கின்றார்.

அதேபோல் இந்த வருடத்துக்கான இரண்டு இடைக்கால கணக்கறிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றது. அதில் ஜனவரி முதல் ஏப்ரல் 31 வரையும் செப்டம்பர் முதல் டிசம்பர் 31 வரையாகும். ஆனால் அதற்கு இடைப்பட்ட மே மாதம் முதல் ஆகஸ்ட் 21 வரையான காலத்துக்கு அரசாங்கத்தினால் செலவழிக்கப்பட்ட நிதிக்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவில்லை. 

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இல்லை. அப்படியானால் அந்த காலப்பகுதியில் அரசாங்கத்தினால் செலவிடப்பட்டது சட்டவிரோதமாகும்.

அத்துடன் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் செலவுகளுக்காக கடன் பெற்று க்கொள்ளும்போது அதற்கான அனுமதியை பாராளுமன்றத்திடம் கேட்க வேண்டும். இந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் 2 ஆயிரம் பில்லியன் ரூபா கடன் பெற்றுக் கொள்ள பாராளுமன்ற அனுமதி வழங்கி இருந்தது.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனுக்கு யார் அனுமதி வழங்கியது என நாங்கள் கேட்கின்றோம். இந்த வருடத்தில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் காரணமாக நாட்டின் மொத்த கடன் தொகைக்கு 2 ஆயிரத்தி 650 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

நாடு சுதந்திரமடைந்து வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிகூடிய கடன் பெற்ற வருடமாக 2020 வருடம் வரலாற்றில் எழுதப்படுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment