வடக்கு, கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதை வரவு செலவுத் திட்டத்தில் முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளது - செல்வராஜா கஜேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

வடக்கு, கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதை வரவு செலவுத் திட்டத்தில் முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளது - செல்வராஜா கஜேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு எந்தவித நிவாரணமும் உள்ளடக்கப்படாத வரவு செலவு திட்டமொன்றையே இம்முறை அரசாங்கம் முன்வைத்துள்ளது. வடக்கு, கிழக்கு என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதை இந்த வரவு செலவுத் திட்டத்தில் முற்றாக மூடி மறைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், இந்த வரவு செலவுத் திட்டம் சிங்கள தேசத்தையும், யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளையும் சமத்துவம் ஆக்கும் நோக்கில் முன்வைக்கப்படவில்லை.

யுத்தத்தினால் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

போரினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளைகளை இழந்து தவிக்கும் வயது முதிர்ந்தவர்கள், சரணடைந்தவர்களின் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் தங்கியிருந்த பெண்கள், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு பெற்றவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர்களை இந்த வரவு செலவுத் திட்டம் கைவிட்டுள்ளது.

அழிவுகளிலிருந்து மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒதுக்கீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கை என்ற பெயரில் தென் பகுதியையும், போரால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கையும் ஒரே மாதிரி கட்டியெழுப்ப முடியாது. 

இலங்கையில் மிகவும் ஏழ்மையானவர்கள் வாழும் பகுதியாக வடக்கு, கிழக்கு மாத்திரமே காணப்படுகிறது. கடந்த 11 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களின் கொள்கைகளால் இந்தப் பிரதேசங்கள் முன்னேற முடியாதவாறு முடங்கிப்போயுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக அறிவிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோதமான மீன்பிடிகள் அதிகரித்துள்ளன. இதனால் வடக்கு கிழக்கின் நீண்ட கடற்பிரதேசம் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் தொழிலை கைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழர்களின் விவசாய நடவடிக்கைகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களினால் அழிக்கப்பட்டுள்ளன. சுதந்திரமாக மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

முல்லைத்தீவு மணலாறு பகுதிகளில் காணிகளை வைத்திருந்தவர்களின் உரிமங்கள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. இதனை மீள வழங்குமாறு கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சம் மாடுகளைக் கொண்டுள்ள பண்ணையாளர்கள் தமது இடங்களிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment