யாழ் பொலிஸ் அதிகாரி அரசியல்வாதியாக கருத்து தெரிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன் - அங்கஜன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

யாழ் பொலிஸ் அதிகாரி அரசியல்வாதியாக கருத்து தெரிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன் - அங்கஜன் எம்.பி

தமிழ் மக்களின் உணவு பழக்க வழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ் நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகி குறித்த பொலிஸ் அதிகாரி தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைப்படுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என நீதிமன்றில் கருத்து கூறியிருந்தார். 

30 வருட கால கொடிய யுத்தத்தினால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இவரது கருத்தானது அனைத்து இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும் பொலிஸ் துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். 

கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின் போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Jeyendra Habeeshan

No comments:

Post a Comment