கைதான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தனுக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 12, 2020

கைதான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தனுக்கு விளக்கமறியல்

நூருள் ஹுதா உமர்

வழக்கு ஒன்றில் சாட்சியை அச்சுறுத்தியது தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த ஆசிரியரான கிருஷ்ணபிள்ளை மனோகரன் ஆகிய கணவன் - மனைவி கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்தப் படுகொலை தொடர்பாக உயிரிழந்த ஆசிரியரின் சகோதரி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து கடந்த 2015ஆம் ஒக்டோபர் 23ஆம் திகதி இந்தக் கொலை தொடர்பில் சந்தேகத்தில் பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், அவரது சகோதரர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் கடந்த 2016 ஓகட்ஸ் 31ஆம் திகதி பல நிபந்தனைகளுடன் பூ.பிரசாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டு பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (12) காலை 9 மணியளவில் கட்சியின் செயலாளரான பூ.பிரசாந்தன் ஆரையம்பதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து மட்டக்களப்பு நகர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி காரியாலயத்துக்கு அவரது பிக்கப் வாகனத்தில் வரும் போது அவரை கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் இடைநடுவில் நிறுத்தி வைத்து இரட்டைக் கொலை வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பின்னர் பகல் 12 மணியளவில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில ஆஜர்படுத்தினர். இதன்போது நீதவான் இவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad