தமிழர்களின் இன விகிதாசாரத்தை அழித்து வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை செய்து கொடுக்கவே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது : சார்ல்ஸ் நிர்மலநாதன் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

தமிழர்களின் இன விகிதாசாரத்தை அழித்து வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை செய்து கொடுக்கவே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது : சார்ல்ஸ் நிர்மலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

தமிழர்களின் இன விகிதாசாரத்தை அழித்து வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை செய்து கொடுக்கவே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இன்றைய செயற்பாடுகளும் சிங்கள மயமாக்கலை நோக்கியதாவே உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற வேளையில் தலைமை தாங்கிய பிரதான இருவருமே இன்று ஆட்சியில் உள்ளனர். இவர்களின் தலைமையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்தவித திருப்திகரமான நிவாரணங்களையும் முன்வைக்கவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களின் கிராமங்களை மீள் கட்டுமானம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புபட்ட அமைச்சுக்களான சுகாதாரம், கல்வி, விவசாயம், நீர்ப்பாசனம், கடற்தொழில் அமைச்சுக்களுக்கு என ஒட்டு மொத்தமாக வழங்கப்பட்டுள்ள நிதிக்கு சமமான நிதியை பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கியுள்ளனர்.

இலங்கை அபிவிருத்தியடைய வேண்டும் என்றால், வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொலை இல்லாதிருக்க வேண்டுமானால் இந்த நாட்டில் சகல இன மத மக்களும் சமமாக நடத்தப்படக் கூடிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல் இந்த சபையில் விடுதலைப் புலிகள் குறித்து லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன சில கருத்துக்களை கூறியிருந்தார், இதற்கு எமது தரப்பு நியாயங்களை சபையில் முன்வைக்க வேண்டும் என நினைக்கின்றேன். தமிழர்களின் தாயக பிரதேசங்களில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை எவ்வாறு குறைத்தனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

1970 ஆம் ஆண்டு மாசி மாதம் 28 ஆம் திகதி மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டு அடுத்த மாதமே பாராளுமன்றம் அதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்தது. அன்றில் இருந்து இப்போது வரையில் 50 ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் 40 வீதம் தமிழர்களின் இன விகிதாசாரத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அழித்துள்ளது.

இதில் குறிப்பாக 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயத்தின் ஊடாக வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா பிரதேசங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தி, அதேபோல் 2008 ஆம் ஆண்டு இரண்டாம் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தமிழர்களின் பூர்வீக நிலங்களை, கிராமங்களை சிங்கள பெயர்களாக மாற்றினர். அதேபோல் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழர்களுக்கு 1960 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட நில உறுதிப்பத்திரத்தை எமது மக்கள் வைத்துக் கொண்டுள்ள நிலையில் அந்த காணிகள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் எமது மக்களுக்கு மாற்றுக் காணியோ வேறு ஏதும் நடவடிக்கையோ இல்லாத சூழ்நிலை காணப்படுகின்றது.

தமிழர்களின் இன விகிதாசாரத்தை அழித்து வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை செய்து கொடுக்கவே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது. சிங்கள ஆட்சியாளர்களின் மோசமான சிந்தனையின் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இதுவாகும். இதுதான் ஆயுத போராட்டம் உருவாக்கவும் காரணமாக அமைந்தது.

தமிழர்களை நேரடியாக அழித்த காரணத்தினால் அன்றைய சூழலே எமது இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. மாறாக எவரும் விரும்பி ஆயுதத்தை ஏந்தவில்லை. இன்றும் சிங்கள ஆக்கிரமிப்புகளில் எமது பிரதேசங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. நிலங்களை அபகரித்து இராணுவத்திற்கு கொடுக்கும் நோக்கமே இன்றும் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad