நோர்வூட் பிரதேச சபை கூட்டத்தில் அமளிதுமளி - வெளிநடப்பு செய்த எதிரணியினர் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

நோர்வூட் பிரதேச சபை கூட்டத்தில் அமளிதுமளி - வெளிநடப்பு செய்த எதிரணியினர்

நோர்வூட் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தயாரிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் ஏற்பட்ட அமளி துமளியையடுத்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நோர்வூட் பிரதேச சபையின் டின்சின் மண்டபத்தில் சபைத் தலைவர் ரவி குழந்தைவேலுவின் தலைமையில் நேற்று (19) நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே எதிரணி உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நேற்றைய கூட்டத்தின் போது, நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இதன்போது பொகவந்தலாவை வட்டார உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினருமான சிவனேசன், கடந்த ஆண்டு பிரதேச சபையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திகள் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், வட்டார உறுப்பினர் என்ற வகையில் எனக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்போது குறுக்கிட்ட சபையின் உப தலைவர் தங்கராஜ் கிஷோகுமார், இது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சபை. உங்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதையடுத்து, கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் எதிரணி உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் நோர்வூட் வட்டார உறுப்பினரான ஜனனி ஜானகி விஜேவர்தன, தனக்கு சிங்கள மொழியில் கூட்டத்தில் பேசப்படும் விடயங்களை மொழி பெயர்ப்பு செய்யுமாறு கோரியமைக்கு, அவ்வாறு மொழி பெயர்ப்பு செய்ய முடியாது என்றும் கூட்டத்திலிருந்து வெளியேறுமாறும் உப தலைவர் கடும் தொனியில் தெரிவித்ததாக உறுப்பினர் ஜனனி ஜானகி விஜேவர்தன தெரிவித்ததுடன் நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது. ஆனால் நோர்வூட் பிரதேச சபையின் சிங்கள மொழியில் மொழி பெயர்ப்பு செய்வதை அடிக்கடி தட்டிக்கழித்து வருகின்றனர். இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நோர்வூட் பிரதேச சபை உப தலைவரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்த எதிரணி உறுப்பினர்கள், தங்கராஜ் கிஷோகுமாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை நோர்வூட் பிரதேச சபை தலைவர் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், உள்ளூராட்சி மன்றங்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும் சம்பவம் தொடர்பில் வினவிட நோர்வூட் பிரதேச சபைத் தலைவரின் கைத்தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போதும் அதன் இரு இலக்கங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பிரதேச சபை காரியாலய தொலைபேசிக்கு தொடர்புகொள்ள முயன்ற போதும் அதைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஷ்ணா)

No comments:

Post a Comment

Post Bottom Ad