60 வயதிற்கு கூடியவர்களே கொரோனா தொற்றாளர்களில் அதிகம், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்கிறார் வைத்தியர் பாலித கருணாபேம - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 3, 2020

60 வயதிற்கு கூடியவர்களே கொரோனா தொற்றாளர்களில் அதிகம், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்கிறார் வைத்தியர் பாலித கருணாபேம

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் அண்மையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 30 சதவீதமானோர் 60 வயதிற்கு மேற்பட்டோராவர். இளைஞர்களுடன் ஒப்பிடும் போது உயிரிழக்கக் கூடிய எச்சரிக்கையும் இந்த வயதுடையோருக்கே அதிகமுள்ளதாக விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னரை விட தற்போதுள்ள வைரஸின் தன்மையானது பரவும் வேகம் அதிகமாகும். சுமார் 25 வயதுடைய இளைஞர்களுடன் 60 வயதுடையவர்களை ஒப்பிட்டு அவதானிக்கும் போது 60 வயதுடையோர் மரணிக்கக் கூடிய எச்சரிக்கை 30 சதவீதம் அதிகமாகக் காணப்படுகிறது. முதியவர்கள் எந்தளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அத்தோடு நாட்பட்ட தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த அவதான நிலைமை காணப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவர். அண்மையில் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 30 சதவீதமானோர் 60 வயதை விட அதிக வயதுடையவர்களாவர்.

ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் தமது சேவைகளை ஆற்றும் போது அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மக்கள் ஒன்று கூடும் இடங்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதால் இயன்றவரை உற்சவங்கள் வைபவங்களை குறைத்துக் கொள்ளுமாறு கோரப்படுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment