ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட்டப்பட்ட 3 மாதாந்த அமர்வுகளுக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் சமூகமளிக்காத நிலையில் மீண்டும் அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட்டப்பட்ட 3 மாதாந்த அமர்வுகளுக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் சமூகமளிக்காத நிலையில் மீண்டும் அழைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் நகர சபையின் 31வது அமர்வு மீண்டும் அடுத்தடுத்த இரண்டு கூட்டங்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வராத நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை 20.11.2020 காலை 9.30 மணிக்கு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையின் 31வது மாதாந்த அமர்வு கடந்த 27.10.2020 அன்று நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் நகர சபை சபா மண்டபத்தில் கூடிய பொழுது அக்கூட்டத்திற்கு 4 உறுப்பினர்களே சமுகமளித்திருந்தனர்.

அதனால் அந்த அமர்வும் அடுத்தடுத்து வந்த இரு அமர்வுகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமுகமளிக்காததால் பிறிதொரு தினத்திற்கு பிற்போடப்பட்டது.

அதனடிப்படையில் மீண்டும் மூன்றாவது தடவையாக 31வது மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை 20.11.2020 கூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் மறு வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அந்த வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையின் மொத்தமுள்ள 17 அங்கத்தவர்களில் 12 பேர் எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5 4 3 2 1 1 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad