அரசாங்கத்தின் கடன் கொள்கை தொடருமானால் ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் போது நாட்டின் மொத்த கடன் தொகை 28 ட்ரில்லியனாக அதிகரிக்கும் - சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

அரசாங்கத்தின் கடன் கொள்கை தொடருமானால் ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் போது நாட்டின் மொத்த கடன் தொகை 28 ட்ரில்லியனாக அதிகரிக்கும் - சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தின் கடன் கொள்கை தற்போதுள்ள நிலையில் தொடருமானால் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் போது நாட்டின் மொத்த கடன் தொகை 28 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரிக்கும். உலகில் வங்குரோத்து நிலையை அடைந்துவரும் 4 நாடுகளில் எமது நாடும் சர்வதேச மட்டத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் செளபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தின் உண்மை நிலை இதுவே என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பான உண்மையான தரவுகள் வரவு செலவு திட்டத்தில் இல்லை.

அதேபோன்று அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் வருமானத்தை பெற்றுக் கொள்ளும் பிரேரணைகள் எதுவும் இல்லை. அதனால் இவர்களின் செளபாக்கியமான நோக்கு வேலைத் திட்டத்தினால் நாட்டின் பொருளாதார நிலைமை எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பதை காணமுடியும். 

மேலும் இவர்களின் செளபாக்கிய நோக்கு வேலைத் திட்டத்தின் பிரகாரம் இவர்கள் கொண்டு சென்ற பொருளாதார வேகம், நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்த வருடத்திலே குறைந்த பொருளாதார வேகமாக அமையவுள்ளது. அடுத்ததாக வரவு செலவு திட்டத்தில் கூடுதலான துண்டுவிழும் தொகை ஏற்படும் வரவு செலவு திட்டமாக இது அமையும். 

அதேபோன்று நாட்டின் மொத்த உள்நாட்டு உட்பத்தி குறைந்த வருடமாக அமையும் நிலை இருக்கின்றது. முதல் 3 மாதத்தில் கொவிட் இல்லாமலே பொருளாதார அபிவிருத்தி வேகம் மறை 1.6 ஆகவே இருந்தது. அரசாங்கத்தின் வரிக்கொள்கையே இதற்கு காரணமாகும்.

மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பாரியளவில் குறைந்துள்ளதால் நாடு சர்வதேச மட்டத்தில் தரப்படுத்தலில் கீழ் மட்டத்துக்கு இறங்கியுள்ளது. தற்போது சீ தரத்தில் இருக்கின்றது. அது டீ தரத்துக்கு செல்லும் வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் வரலாற்றில் முதல் தடவையாக கூடுதலாக நிதி அச்சிடப்பட்டுள்ளது. அது அரச வருமானத்தில் 40 வீதமாகும். 

அதேபோன்று வருடமொன்றில் அதிகூடிய கடன் பெற்றுக் கொண்ட வருடமாக இந்த வருடம் இடம்பெறுகின்றது. நாட்டின் மொத்த கடனுக்கு மேலும் 2.2 ட்ரில்லியன் ரூபா அதிகரிக்கப்படுகின்றது. இந்த நிலை தொடர்ந்து சென்றால் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் 2024 ஆகும்போது நாட்டின் கடன் 28 ட்ரில்லியன் வரை அதிகரிக்கும். 

இவர்கள் நாட்டை பொறுப்பேற்கும்போது இருந்தது 13 ட்ரில்லியனாகும். அதனால் அரசாங்கத்தின் சுபீட்சத்தை நோக்கிய வேலைத் திட்டத்தினால் நாடு அபிவிருத்தியின்பால் சென்றிருக்கின்றதா அல்லது மேலும் வீழ்ச்சியடைந்திருக்கின்றதா என்றே பார்க்க வேண்டும். 

அரசாங்கம் இலக்கங்களை மறைத்து வெளியிடுவதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையப் போவதில்லை. அதனால் பொருளாதாரம் தொடர்பான உண்மையான தரவுகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கத்தின் ஒரு வருட காலத்தில் ஒரு அரச நிறுவனத்தையேனும் கட்டியெழுப்ப அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது. அப்படியானால் தற்போதுள்ள பொருளாதார நிலையில் நாட்டை எவ்வாறு இவர்கள் கட்டியெழுப்புவார்கள் என கேட்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறாமல் நாட்டை கட்டியெழுப்புவதாக தெரிவிக்கின்றனர். முடியுமானால் அதனை செய்துகாட்ட வேண்டும். அரசாங்கத்துக்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் தற்போது இருக்கின்றன. ஆனால் நாட்டை முன்னேற்றுவதற்கான ஆரம்ப அடித்தளத்தையேனும் இதுவரை இவர்கள் போடவில்லை. 

எனவே உலகில் பங்குராேத்து நிலையை அடைந்துவரும் 4 நாடுகளில் எமது நாடும் சர்வதேச மட்டத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றது. அந்த நிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான உண்மை தரவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad