மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது - சிறிநேசன் மற்றவர்களின் சட்டியில் என்ன வேகுது என்று பார்க்காமல் உங்களது சட்டியில் என்ன கருகுது என்று பாருங்கள் : இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது - சிறிநேசன் மற்றவர்களின் சட்டியில் என்ன வேகுது என்று பார்க்காமல் உங்களது சட்டியில் என்ன கருகுது என்று பாருங்கள் : இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு, மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதவனை, மைலத்தமடு ஆகிய பிரதேசங்களில் சிலர் அத்துமீறி காணி அபகரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது புதிதான விடையமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெறுகின்ற ஒரு சம்பவமாக இருக்கின்றது. இதற்கு ஒரு நிரந்தர முடிவை எடுக்க வேண்டிய நிலைப்பாடு இருக்கின்றது. 

மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் யாராவது, அத்து மீறி வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடையம். இவ்வாறு யாரும் காணி அபகரிக்க முடியாது என்ற விடையத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இவ்வாறு கடந்த காலத்தில் அந்த உரிய பகுதியில் காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றபோது அவை தடுத்து நிறுத்தப்பட்டன. அதுபோல் தற்போதும் ஏற்பட்டிருக்கின்ற இந்நிலமையையும் தடுத்து நிறுத்துவதற்காக நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

குறித்த மைலத்தமடு, மாதவனை ஆகிய பிரதேசங்கள் எமது கால்நடைப் பண்ணையாளர்கள் மேச்சல் தரைக்காக காலா காலமாக பயன்படுத்தி வருகின்ற ஒரு பகுதியாகும். ஆனால் இவ்வாறு காணி அபகரிப்புக்களில் ஈடுபடுபவர்களால் அங்குள்ள பண்ணையாளர்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, கால்நடைகளைச் சுடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இதற்கு நிரந்தரத் தீரிவைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. 

இவ்விடையம் குறித்து நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம் ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார் எனத் தெரிவிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் இருக்கின்றேன் அப்போதிருந்து மக்களுக்குப் பிரச்சனைகள் வரும்போதல்லாம் களத்தில் நின்று போராடியிருக்கின்றோம். அப்போதிருந்து வீட்டுக்குள் முடங்கியிருந்தவர்கள்தான் தற்போது எங்கள் மீது சில விசமத்தனங்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கின்றார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. தங்களுடைய வங்குரோத்து அரசியலை நடாத்துகின்றவர்கள்தான் இவ்வாறு செயற்படுகின்றார்கள்.

தற்போது நாங்கள் ஆளும் கட்சியில் இருக்கின்றோம் எமது நோக்கம் அரசாங்கத்தை உரிய முறையில் அணுகி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் கம்பரெலிய யுத்தம் ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் போன்றவர்கள் செய்தார்கள் அந்த யுத்தத்தைச் செய்தும் மக்கள் அவரை நிராகரித்துள்ளார்கள். எனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் மற்றவர்களின் சட்டியில் என்ன வேகுது என்று பார்க்காமல், உங்களது சட்டியில் என்ன கருகுது என்று பாருங்கள், அவ்வாறு பார்த்தால் மக்கள் உங்களை எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்வர்கள்.

நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றோம் என்பதற்காக மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டுதான் வருகின்றோம். இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்புத் தொடர்பில், நானும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனும், அமைச்சர் சமல் இராஜபக்சவுடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கலந்துரையாடியுள்ளோம். 

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துடன் நான் நேரடியாக பேசினேன், அவ்விடத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் அவரை தொலைபேசியில் பேச வைத்து விடையத்தை விளக்கினோம். உரிய இடத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் நேரடியாக சென்று பார்வையிடவுள்ளனர். இவ்வடையம் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். அத்துமீறி காணி அபகரிப்பு செய்பவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். எனவே மக்களுக்குப் பிரச்சனைகள் வருகின்றபோது நாம் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment