நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம், வைரஸ் வீடுகளுக்கு சென்றுள்ளது : மீண்டும் எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம், வைரஸ் வீடுகளுக்கு சென்றுள்ளது : மீண்டும் எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கையில் இதற்கு முன்னொருபோதும் இல்லாதவாறு ஒரே நாளில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனினும் அசாதாரணமான மரணங்களை கட்டுப்படுத்தும் கட்டத்தில் இலங்கை இருப்பதால் இப்போதாவது அபாயம் குறித்து உண்மையான தகவல்களை சுகாதாரத் துறையினர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள அபாய நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெளிவுபடுத்துகையில், செவ்வாய்கிழமை மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகின. 5 நாட்களில் 6 மரணங்கள் புதிய கொத்தணிகளால் பதிவாகியுள்ளன.

நாம் அனைவரும் எச்சரிக்கை நிலைமையொன்றுக்கு முகங்கொடுத்துள்ளோம். செவ்வாய்கிழமை இனங்காணப்பட்ட 457 தொற்றாளர்களில் 10 பேர் தவிர ஏனைய அனைவரும் சமூகத்திலிருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர்.

இவ்வாறு ஒரே நாளில் சமூகத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை முடக்குவதிலிருந்து விலகி அதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

வைரஸ் சமூகத்திற்குள் செல்லவில்லை. வீடுகளுக்குச் சென்றுள்ளது. எனவே தற்போதாவது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் ஏற்கனவே நாம் எச்சரித்ததைப்போன்று இரு மாதங்களில் தவிர்க்க முடியாதளவு அசாதாரணமானளவில் மரணங்கள் பதிவாகக் கூடும்.

எனினும் தற்போது மரணங்களை கட்டுப்படுத்தக் கூடிய மட்டத்திலேயே நாம் இருக்கின்றோம். எனவே சரியான எச்சரிக்கை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad