எச்சரிக்கை மிக்க பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளை வெளியிடவுள்ளோம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

எச்சரிக்கை மிக்க பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளை வெளியிடவுள்ளோம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

பேலியகொடை கொத்தணியைப் போன்று பாரிய கொத்தணிகள் உருவாகுமாயின் பாரதூரமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்காக எச்சரிக்கை மிக்க பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படக் கூடிய வழிமுறைகள் உள்ளடங்கிய ஆவணத்தை வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், மினுவாங்கொடை கொத்தணியின் பின்னர் பல கிளை கொத்தணிகள் உருவாகியுள்ளன. எதிர்பாராத விதமாக பேலியகொடையைப் போன்று பாரிய கொத்தணி உருவாகிவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.

எனவே அவ்வாறான பாரிய கொத்தணிகள் உருவாகுவதை தடுக்கும் அதேவேளை உருவாகியுள்ள கொத்தணிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்காக எச்சரிக்கை மிக்க பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படக் கூடிய வழிமுறைகள் உள்ளடங்கிய அறிக்கையை வெளியிடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதற்கான இறுதி கட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

தொற்று நோயியில் விசேட வைத்திய நிபுணர்கள், சமுதாய வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பன ஒன்றிணைந்து பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்த இறுதி ஆவணத்தை தயாரித்துள்ளன.

இதன் மூலம் அபாயமுடைய பகுதிகளுக்கூடாக யார் பயணிக்க முடியும், எந்த சந்தர்ப்பங்களில் அப்பகுதிகள் ஊடாக பயணிக்க அனுமதியளிக்கப்படும், எவ்வாறான நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் மற்றும் பயணிக்கும் போது எவ்வாறான நிபந்தனைகளை பூரணப்படுத்தியிருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனூடாக அத்தியாவசிய சேவைகளை நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னெடுக்க வாய்ப்பளிக்கப்படும். தற்காலிகமாகவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொருட்களை அநாவசியமாக கொள்வனவு செய்து சேர்த்து வைக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad