சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை காத்திரமான முறையில் பயன்படுத்துவது குறித்து இலங்கை - பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை காத்திரமான முறையில் பயன்படுத்துவது குறித்து இலங்கை - பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆராய்வு

(நா.தனுஜா) 

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு காத்திரமான முறையில் பயன்படுத்துவது என்பது குறித்தும் அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் நகர்வுகளின் போது ஏற்படும் நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. 

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மட் சாத் கட்டாக், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கிறது. 

இக்கலந்துரையாடலின் போது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு காத்திரமான முறையில் பயன்படுத்த முடியும் என்று விரிவாக ஆராயப்பட்டது. 

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இரு தரப்பிலிருந்தும் ஏற்படத்தக்க பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு தீர்வை எட்டுவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

மேலும் ஆடை உற்பத்தி, கட்டுமானப் பொருட்கள், வேளாண்மை மற்றும் பதப்படுத்தல், மருந்துப் பொருட்கள், சுற்றுலா மேம்பாடு, தொழில்நுட்ப அபிவிருத்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்குக் காணப்படும் சாத்தியப்பாடு தொடர்பிலும் இரு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை முன்வைத்தனர். 

இதன்போது பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்று அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad