அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொதி, கடன் தவணைகளை செலுத்த நிவாரண காலம், அனைத்து பரீட்சைகளையும் பிற்போடவும் - பசில் ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொதி, கடன் தவணைகளை செலுத்த நிவாரண காலம், அனைத்து பரீட்சைகளையும் பிற்போடவும் - பசில் ராஜபக்ஷ

கொவிட்-19 வைரஸ் மீண்டும் தலைத்தூக்கியுள்ள சந்தர்ப்பத்திலும் அத்தியவசிய சேவைகளை திறமையாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ 2020.10.27 அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

மோசமான சூழ்நிலையிலும் மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியவசியமான சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பதற்கு முறையான நடவடிக்கையொன்றை திட்டமிடுவதாக பசில் ராஜபக்ஷ அவர்கள் இதன்போது அத்தியவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

உலகில் பொருளாதார ரீதியில் சக்திவாய்ந்த நாடுகளும் கொவிட்-19 வைரஸிற்கு முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும் இந்த வைரஸை கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், மக்களுக்கான அத்தியவசிய சேவைகளை விரைந்து பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்கள் தொடர்பில் இதன்போது கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ அவர்கள், சில சக்திவாய்ந்த நாடுகளில் லட்சக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற, ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் சுகாதார பிரிவு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக பிரிவு ஆகியன கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு நாடு என்ற வகையில் பாராட்ட வேண்டும்.

வைரஸ் காரணமாக ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை தடுப்பதுடன், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய வயதானவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிறுத்தினார். எனவே, பொது உதவிகள், ஓய்வூதியம் என்பவற்றை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர்கள் மற்றும் தபால் அதிபர்களுக்கு குறித்த கலந்துரையாடலின்போது அறிவுறுத்தல் வழங்கினார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை பெற்று அந்நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

குறித்த சந்திப்பில் மின்சாரம், நீர், எரிவாயு, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியவசிய சேவைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், பொதுமக்களுக்கு திறமையான சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு தமது நிறுவனங்கள் தயாராகவிருப்பதாகவும், சுகாதார பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய தங்களது நிறுவனங்களின் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடன் தவணைகளை செலுத்துவதற்கு நிவாரண காலமொன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒரு வார காலமாக முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு நகரில் கழிவு முகாமைத்துவத்தை முன்னர் போன்றே சுகாதார பாதுகாப்புடன் முன்னெடுத்து வருவதாக குறித்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்த கொழும்பு மாநகர சபையின் நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

கொழும்பு நகருக்குள் கொவிட் வேகமாக பரவி வருகின்றமையால் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு, கொழும்பிற்கு வருகைத்தருவோரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக நிர்வாக அமைச்சிற்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பித்து, பிரதேச மட்டத்தில் அரச அலுவலகங்களை பராமரிப்பது தொடர்பான வழிமுறை வகுக்கப்பட வேண்டும் என இதன்போது கலந்துடையாடப்பட்டது.

அத்துடன், நபர்களுக்கு இடையிலான சமூக இடைவெளியை பேணி சுகாதார துறையின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியவற்றினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், மக்கள் கொழும்பு நகரிற்கு வருகைத்தருவது முன்னரைவிடவும் மிகவும் குறைவடைந்துள்ளதாகவும், உயர்த்தரப் பரீட்சைகள் இடம்பெறுவதால் மாணவர்களின் வசதிக்கேற்ப பயணக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், பரீட்சை திணைக்களம் மற்றும் பல்வேறு நிறுவனங்களினால் நடத்தப்படும் பரீட்சைகளை இந்த நிலைமையை கருத்திற்கொண்டு பிற்போடுமாறும் பசில் ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட அத்தியவசிய சேவைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad