முடக்கப்பட்டது யாழ்ப்பாணம் கரவெட்டி - ராஜ கிராமம் : 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

முடக்கப்பட்டது யாழ்ப்பாணம் கரவெட்டி - ராஜ கிராமம் : 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ். வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜ கிராமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 

அதன் மூலம் ராஜ கிராமத்திலிருந்து வெளியேறவோ அல்லது ராஜ கிராமத்துக்குள் உள்நுழையவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். 

“பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று திரும்பிய பருத்தித்துறை மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் அவர்களில் ஒருவர் ராஜ கிராமத்தை சேர்ந்தவர். அவர் கிராமத்தில் பலருடன் பழகியுள்ளார். இந்நிலையில் தொற்று பரவலை தடுப்பதற்காக ராஜ கிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதேபோல் பாசையூர் மேற்கு மற்றும் குருநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

ஐங்கரன் சிவசாந்தன், ஜெகதீஸ் சிவம், நிதர்சன் விநோத்

No comments:

Post a Comment