நல்லாட்சி தந்த பரிசு, சிறையில் 5 வருடம் பூர்த்தி - பிள்ளையானின் உள்ளக் குமுறல்! - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

நல்லாட்சி தந்த பரிசு, சிறையில் 5 வருடம் பூர்த்தி - பிள்ளையானின் உள்ளக் குமுறல்!

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தனது முகநூலில் மேற்கண்டவாறு உள்ளக் குமுறல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 11.10.2020 ஆம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு 5 வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள்தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தூண்டுதலுக்கு கிடைத்த வெற்றிக்கேடயம்.

அத்தோடு எல்லாவற்றையும் தலைமையேற்று நடாத்தி விட்டு ´எடுப்பார் கைப்பிள்ளையாக´ ஆட்சி செய்து என்னுடைய அம்மாவின் கோரிக்கை கடிதத்தை உதாசீனம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த வேளையில், சிறைக்கு நயவஞ்சகமாக அனுப்பப்பட்டேன். இருந்தாலும், என் மேல் நம்பிக்கை வைத்து, அனைத்து போலிப் பிரசாரங்களையும் முறியடித்து, வட கிழக்கில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகூடிய 54,198 விருப்பு வாக்குகளை அளித்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தை வழங்கினர்.

அன்பான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவனாக, விரைவில் நயவஞ்சகவலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் எனது அரசியல் பயணம் தொடர்கிறது என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

No comments:

Post a Comment