கொரோனா தடுப்பூசியை உருவாக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் - அமெரிக்கா அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

கொரோனா தடுப்பூசியை உருவாக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் - அமெரிக்கா அறிவிப்பு

The leading company to begin producing the Corona vaccine: Target to  produce 200 million doses || கொரோனா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கும் முன்னணி  நிறுவனம்: 200 கோடி 'டோஸ்' உற்பத்தி செய்ய ...
கொரோனா தொற்றை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலக சுகாதார நிறுவனத்துடன் சேர மாட்டோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் முதன் முதலாக தொடங்கி பரவத் தொடங்கியது. ஆனால் இது பற்றிய தகவல்களை சீனா ஆரம்ப கட்டத்தில் வழங்கவில்லை என்றும், இதில் சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் இணைந்து செயல்பட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக எழுந்த மோதலால் உலக சுகாதார நிறுவனத்தின் தொடர்பை அமெரிக்கா துண்டித்தது. அந்த அமைப்புக்கான நிதி வழங்கலையும் நிறுத்தியது.

இந்த நிலையில் உலகை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி முழுவீச்சில் நடந்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்துடன் ஏறத்தாழ 170 நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி உருவாக்கத்தை விரைவுபடுத்தவும், உற்பத்தி செய்யவும், வினியோகிக்கவும் அவை உடன்பட்டுள்ளன.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், சம அளவில் வினியோகிப்பதற்கும் நடந்து வருகின்ற உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியில் சேரப்போவதில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளது. சீனாவின் ராஜதந்திரத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்கு பங்கு இருப்பதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகையில், “இந்த வைரசை தோற்கடிப்பதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து தனது சர்வதேச கூட்டாளிகளை ஈடுபடுத்தும். ஆனால் ஊழல் நிறைந்த உலக சுகாதார அமைப்புடன் சேரமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், 6 தயாரிப்பாளர்களிடம் இருந்து 80 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

இது பற்றி செபி என்று அழைக்கப்படுகின்ற தொற்று நோய் தடுப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் ரிச்சர்டு ஹேட்சட் கவலை தெரிவித்துள்ளார். 

இது பற்றி அவர் கூறும்போது, “அமெரிக்காவும், பிற பணக்கார நாடுகளும் ஏற்கனவே தடுப்பூசியின் முதல் டோஸ்களை தங்களுக்கு ஒதுக்கி வைத்துள்ளன. இது கவலை அளிக்கிறது. உலகளாவிய தலைவர்களை நாம் சம்மதிக்க வைக்க வேண்டியது உள்ளது. ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் ஒரு தடுப்பூசி கிடைக்கும்போது, அது உலகளவில் பகிரப்பட வேண்டும். இது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்து விடக்கூடாது” என குறிப்பிட்டார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒரு தடுப்பூசியே போதுமானதாக இருக்கும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரம் தனி நபர்களின் மரபணு வரிசைகளை அமெரிக்காவின் வால்டர் ரீட் ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி மோர்கன் ரோலண்ட் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தனர். 

அதைத் தொடர்ந்து, “கொரோனா வைரஸ், 2019 டிசம்பர் தொடங்கியே மிக குறைவானதாக மாறிவிட்டது. இதனால் அந்த வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு ஒரு தடுப்பூசி போதுமானதாக இருக்கும்” என்று கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad