அட்டுலுகமயில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, September 18, 2020

அட்டுலுகமயில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது

அண்மையில் பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (18) அதிகாலை பண்டாரவளை நகரில் வைத்து பிரதான சந்தேகநபர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதான பிரதான சந்தேகநபர், அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கொட்டுகொலயா என அழைக்கப்படும் மொஹமட் ரிபாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று (17) 4 சந்தேகநபர்கள் கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூரகல பிரதேசத்தில் வைத்து கல்தொட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர்கள், அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 18, 22, 27, 31 வயதுடையவர்களாவர். இச்சந்தேகநபர்கள் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அத்தோடு, பிரதான சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

கடந்த 9ஆம் திகதி, அட்டுலுகம பிரதேசத்தில் பண்டாரகம பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தடையை ஏற்படுத்தி பொலிஸாரை தாக்கி காயம் ஏற்படுத்தி, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை தொடர்பில் இதுவரையில் பெண்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர், பெண் பொலிஸ் சார்ஜன்ட், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய நால்வர்காயமடைந்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad