அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கடலரிப்பு, தொல்பொருள் அதிகாரிகளை கட்டுப்படுத்தல், போதைப் பொருள் ஒழிப்பு, யானைகளிடமிருந்து பாதுகாப்பு மற்றும் வீடமைப்புத் திட்டத்துக்கான நிலுவைகள் தொடர்பாக பேசினார் பைசால் காசிம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கடலரிப்பு, தொல்பொருள் அதிகாரிகளை கட்டுப்படுத்தல், போதைப் பொருள் ஒழிப்பு, யானைகளிடமிருந்து பாதுகாப்பு மற்றும் வீடமைப்புத் திட்டத்துக்கான நிலுவைகள் தொடர்பாக பேசினார் பைசால் காசிம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையின் கீழ் 15.09.2020 அன்று அம்பாறையில் இடம்பெற்றது. குறித்த இக்கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கருத்துத் தெரிவிக்கும் போது, கரையோரப் பிரதேசங்கள் பலவற்றை காவு கொண்டிருக்கும் கடலரிப்புப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நஷ்டஈடு எதுவும் வழங்கப்படாதிருப்பது பற்றி தெரிவித்தார். 

குறிப்பாக மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் பெருத்த நஷ்டத்திற்குட்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கான உரிய நஷ்டஈடுகள் விரைவில் வழங்கப்பட வழிசெய்ய வேண்டும் என்று கோரினார்.

மேலும், தொல்பொருள் சம்பந்தமான அதிகாரிகள் குறித்த பிரதேசத்தின் தவிசாளருக்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ அறிவிக்காமல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டத்துக்கு புறம்பானது எனவும் சுட்டிக்காட்டினார். 
அண்மையில் உரிய அனுமதிகள் பெறாது பல இடங்களை இலக்கு வைத்தாற் போன்று தொல்பொருள் அதிகாரிகள் திடீர் விஜங்கள் மேற்கொண்டு கள ஆய்வு செய்வதானது பொதுமக்களிடையே அனாவசியமான அசிரத்தைகளை ஏற்படுத்துகிறது எனவும் இதற்கான கட்டுப்பாடுகள் முறையாக பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் பைசால் காசிம் கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மலினப்பட்டு வரும் போதைப் பொருட்கள் சமூக சீர்கேட்டை மிக துரித கதியில் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதற்கான உரிய சட்ட நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ள வழிசெய்யவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

அண்மைக் காலமாக பொதுமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் யானை படையெடுப்பினால் பல பொருள் சேதங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருவதாகவும் இதற்கான குறுகிய கால மற்றும் நெடுங்கால திட்டங்களை விரைவாக அமுல்படுத்தவும் கோரிக்கை விடுத்தார்.

சென்ற அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தினால் வீடில்லாத பல மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை பணம் வழங்காதிருப்பதையும் குறித்த கூட்டத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர், இது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment