உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் : முக்கிய அதிகாரியுடனான தொலைபேசி உரையாடலொன்று வெளியானது - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் : முக்கிய அதிகாரியுடனான தொலைபேசி உரையாடலொன்று வெளியானது

(எம்.எப்.எம்.பஸீர்) 

எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பிரதானி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின், தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி, தனிப்பட்ட மடிக் கணினி ஆகியவற்றை பொறுப்பேற்குமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பொலிஸ் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டது. 

குறித்த கையடக்கத் தொலைபேசியை அவர், மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த கலந்துரையாடல்களை பதிவுசெய்ய பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, அதனை மையப்படுத்தி அந்த தொலைபேசியை தமது பொறுப்பில் எடுக்குமாறு, தனது பொலிஸ் பிரிவுக்கு ஆணைக்குழு உத்தரவிட்டது. 

2019 ஏப்ரல் இறுதிப் பகுதியில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலின் பதிவை கேட்ட பின்னரே, ஆணைக்குழு, தனது பொலிஸ் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெக்கின்னவுக்கு மேற்படி உத்தரவைப் பிறப்பித்தது. 

கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கான காரணங்கள் மற்றும் பின்னணியை கண்டறிய அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் நியமித்த, மலல்கொட ஆணைக்குழுவின் நியமனத்தை அடுத்து இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிப்பட்டது. 

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது. 

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் நேற்றைய தினம், முன்னாள் தேசிய உளவுத் துறை பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன வழங்கிய நீண்ட சாட்சியத்தை மையப்படுத்தி அவரிடம் குறுக்குக் கேள்விகளை தொடுக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவுக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தது. 

எனினும் சாட்சியம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் சில விடயங்களை ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்திய நிலந்த ஜயவர்தன, தொடர்ந்து தனக்கும் - முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றினை ஆணைக்குழுவில் ஒலிபரப்ப அனுமதி கோரி ஒலிபரப்பினார். 

சுமார் 25 நிமிடங்கள் 4 செக்கன்கள் வரை நீண்ட அந்த தொலைபேசி அழைப்பு குரல் பதிவு ஒலிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பல்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. 

குறித்த குரல் பதிவு, தனது தனிப்பட்ட தொலைபேசியில் ஹேமசிறி பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் எனவும் அதனை பதிவு செய்த பின்னர், தனது மடிக் கணினிக்கு மாற்றி, இறுவெட்டில் பதிவு செய்துகொண்டதாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இதன்போது ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார். தனக்கும் தேசிய உளவுச் சேவை மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே குறித்த உரையாடலை தான் பதிவு செய்ததாக அவர் கூறினார். 

இந்நிலையிலேயே குறித்த குரல் பதிவில் உள்ள குரல்கள், நிலந்த ஜயவர்தன மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவினுடையது என்பதை உறுதி செய்ய அதனை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவிட்ட ஆணைக்குழு, அவ்வுரையாடலை பதிவு செய்த தனிப்பட்ட தொலைபேசி மற்றும் அதனை சேமித்து வைத்த தனிப்பட்ட மடிக் கணினி ஆகியவற்றை பொறுப்பேற்க தனது பொலிஸ் பிரிவுக்கு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை பிறப்பிக்க முன்னர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நிலந்த ஜயவர்தனவிடம், உரையாடலை பதிவு செய்த தனிப்பட்ட தொலைபேசியை தற்போதும் பயன்படுத்துகின்றீர்களா என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன, 'இல்லை. அது வீட்டில் உள்ளது. வீட்டில் உள்ள ஒருவர் அதனை பயன்படுத்துகின்றார்.' என தெரிவித்தார். 

இதன்போது, மடிக் கணியை மட்டும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கக் கூடாது எனவும், மடிக்கணினி குரல் பதிவினை சேமித்து வைத்த உபகரணம் மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டிய ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணி டில்சான் ஜயசூரிய, வீட்டில் உள்ள குறித்த கையடக்கத் தொலைபேசியை கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். 

எனினும் இதற்கு ஆணைக்குழுவுக்கு உதவும் முகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன எதிர்ப்பு தெரிவித்தார். அரச இராசாயன பகுப்பாய்வுகளுக்கு முதல் கட்டத்திலேயே அந்த தொலைபேசி தேவை இல்லை எனவும், சாட்சியாளரின் நம்பிக்கைத் தனமைக்கு சவால் விடுக்கப்படுமானால் மட்டும் அது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன கூறினார். 

இதன்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவும், மடிக் கணினி போன்றே குறித்த கையடக்கத் தொலைபேசியையும் பொறுப்பேற்க வேண்டும் என வாதிட்டார். 

இந் நிலையில், ஆணைக்குழு சட்டத்தின் 7 (சி) பிரகாரம், இந்த ஆணைக்குழு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான பூரண விசாரணையில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ஜனக் டி சில்வா, நிலந்த ஜயவர்தனவின் வீட்டில் உள்ள குறித்த தொலைபேசியையும் கையேற்குமாறு ஆணைக்குழுவின் பொலிஸ் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெலிக்கின்னவுக்கு உத்தரவிட்டார். 

அவ்வாறு பொறுப்பேற்கும் கையடக்கத் தொலைபேசியை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும், அதனை வீட்டில் பயன்படுத்துபவரின் முன்னிலையில் சீல் செய்து அவரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ளவும் இதன்போது ஆணைக்குழு பொலிஸ் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியது. 

ஆணைக்குழுவில் ஒலிபரப்பட்ட நிலந்த ஜயவர்தன - ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு இடையிலான குரல் பதிவின் சுருக்கம் வருமாறு...

நிலந்த ஜயவர்தன : சேர் ... 'இதனை நாங்கள் அறிந்திருந்தோம். இவ்வளவு பாரிய அளவில் நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை' என நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுத்ததுதான் தவறு. நான் ஸ்டேட்மென்ட் அளிக்க செல்லவில்லையே. 

ஹேமசிறி பெர்னாண்டோ : 'சரி... நீங்கள் எனக்கு அறிவித்ததாக கூறுங்கள். நான் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்தே இருந்தேன். 

நிலந்த ஜயவர்தன : சேர்.. நான் 7 ஆம் திகதி உங்களுக்கு அறிவித்தவுடன், நீங்கள் வெல் ரிசீவ்ட் என்றும் அனுப்பி இருந்தீர்கள் 

ஹேமசிறி : இப்போது இங்குள்ள பிரச்சினை ஜனாதிபதியை தெளிவுபடுத்தவில்லை என்பதே. 

நிலந்த ஜயவர்தன : ஜனாதிபதிக்கு கூறினீர்களா என என்னிடம் கேட்கவில்லை. ஜனாதிபதிக்கு அறிவிக்காமை தவறு என பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எப்படியும் நான் அவருக்கு கூறவில்லை. 

ஹேமசிறி : சரி... நீங்கள் கூறவும் இல்லை. நான் கூறவும் இல்லை. 

நிலந்த ஜயவர்தன: ஜனாதிபதி 20 ஆம் திகதி இலங்கையில் இருக்கவில்லை தானே. அப்படியானால் நான் பிரதமருக்கு கூறியிருக்க வேண்டும். நான் பிரதமருக்கு கூறவில்லை. அது கடமை தவறியதாக ஆக மாட்டாது. இது பெரிய 'இசு' வாக மாறாது. பத்திரிகைகளே இதனை 'இசு' வாக வெளிப்படுத்துகின்றன. இது 'பொலிடிகல் இசு' ஒன்று மட்டுமே. 

ஹேமசிறி : தவறுகள் யாரின் கைகளினாலும் இடம்பெறலாம். தற்போது இவர்கள் என்னை கைது செய்யப் போகின்றனர். நான் பாதுகாப்பு செயலர் பதவியில் இருந்து விலகிவிட்டேன். 

நிலந்த : பொலிஸ் மா அதிபர் விலகிவிட்டாரா? 

ஹேமசிறி : இல்லை. பொலிஸ் மா அதிபர் விலகாமல் இருக்கின்றார் என்பதற்காக எங்கள் இருவரையும் இலக்கு வைப்பது தவறு. 

நிலந்த : சேர்.. நான் நினைக்கின்றேன் நீங்கள் ஜனாதிபதியைச் சந்திப்பது நல்லதல்லவா? 

ஹேமசிறி : இல்லை. நான் ஜனாதிபதியை சந்திக்க மாட்டேன். நான் மிக சினேகபூர்வமாக கதைத்துவிட்டு வந்து மறு நாளில் இருந்தே அவர் என்னை மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். இப்போது அமைதியாக இருந்தால் சரி. 

நிலந்த : நான் அனைத்து பகுதிகளிலும் சிறைப்பட்டுள்ளேன். என்னை ஜனாதிபதியின் சகா என விமர்சிக்கின்றனர். என்னை விலக்குமாறு கூறுகின்றனர். இப்போது, மகேஷ் சேனநாயக்கவும் தெரியாது என கூறுகின்றார். 

ஹேமசிறி : ஆம்... அதுதான் அவர்கள் இது தொடர்பில் கலந்துரையாடிய கலந்துரையாடல்களில் இருந்தார்கள் தானே. 

நிலந்த : 9 ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு கூறிய பின்னர், 16 ஆம் திகதி காத்தான்குடியில் பதிவான வெடிப்புச் சம்பவம் சஹ்ரானின் ஒத்திகை என 3 அறிக்கைகள் அனுப்பினேன். 20 ஆம் திகதி மாலையும் கூறினேன். பஞ்சிகாவத்தை, கொச்சிக்கடை பகுதியில் அவதானம் செலுத்துமாறு கூறினேன். ஹோட்டல்களையும் தாக்கப் போவதாக நான் கூறினேன். யாரும் எனக்கு தெரியாது என கூற முடியாது. 7 ஆம் திகதி முதலே இது ஒரு பாரிய பிரச்சினையாக என எனக்கு தோன்றியது. 

ஹேமசிறி : அப்போது நீங்கள் எனக்கு, பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு கூறுங்கள் என சொல்லியிருந்தால்.... 

நிலந்த : சேர், நான் கொழும்பை தாக்குகின்றார்கள் என கூறவில்லையே. நான் உறுதியான தகவல்களை கொடுத்தேன். அத்துடன் சேர், அங்கு வீதித் தடை போடுங்கள் இங்கு வீதித் தடை போடுங்கள் என பொலிஸ் மா அதிபருக்கு நீங்கள் கூறத் தேவை இல்லை. எனினும் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமை தொடர்பில் சிறிய பிரச்சினை உள்ளது. எனினும் நாம் இது குறித்து கூறாவிட்டாலும் 'பிக் பிட்ச்சர்' தொடர்பில் 2015 இலிருந்து கூறி இருக்கின்றோம். 

ஹேமசிறி : எமது சினேகபூர்வத்தின் அடிப்படையில் இதனை நீங்கள் என்னிடம் கூறியிருந்தால், தேவாலயங்களை தாக்கப் போகின்றார்கள். இவ்வாறு ஒரு தாக்குதல் இடம்பெற போகின்றது என நான் அவருக்கு கூறி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பேன். அவ்வாறு செய்திருந்தால் நாம் அனைவரும் தப்பியிருப்போம். 

நிலந்த : அதனை செய்யாமையே தற்போது எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை. அனைவரும் இதனூடாகவே அரசியல் இலாபம் தேடப்பர்க்கின்றார்கள். 9 ஆம் திகதி கலந்துரையாடலில் நாம் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் போதுமானதாக இல்லை. இப்போது அவர்கள் இல்லை என்றாலும் நான் இதனை பிரிகேடியர் சூலாவிடம் கூறினேன். 

ஹேமசிறி : அவர் ஒரு நாள் கூட சஹ்ரான் தொடர்பில் கூறவில்லை. அவர் வேறுவேறு விடயங்கள் தொடர்பிலேயே கதைத்தார். பத்திரிகைகளில் பார்த்தே அவர் தகவல் கூறுவார். 

நிலந்த : தான் அறிந்திருக்கவில்லை என சூலா கூறுகின்ரார். செவ்வாயன்று கூட்டத்தில் அவர் இருந்தார். சிசிர மெண்டிஸ், தம்பி இதற்கு என்ன செய்வது என கேட்டார். நான் கூறினேன், பைத்தியம் விளையாட வேண்டாம். இது பாரிய பிரச்சினை. இதனை முன்வையுங்கள். என்று கூறினேன். 

ஹேமசிறி : சி.என்.ஐ. இற்கு, இராணுவம், கடற்படை கூறவில்லை என குற்றம் எழுமா? அவர் எப்படியும் விலகுவதற்காகவே பார்த்துக்கொண்டிருந்தவர். 

நிலந்த : அவர் செவ்வாயன்று கூட்டத்தில் இதனை கதைத்ததாக கூறினால் அவர் விடுதலை.

No comments:

Post a Comment

Post Bottom Ad