பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கருப்பினத்தவரின் குடும்பத்தினரை சந்திக்கிறார் அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கருப்பினத்தவரின் குடும்பத்தினரை சந்திக்கிறார் அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன்

அமெரிக்கா: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கருப்பினத்தவரின்  குடும்பத்தினரை சந்திக்கிறார் ஜோ பைடன் || Joe Biden to meet family of black  man shot by ...
அமெரிக்காவில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இன்று சந்திக்கிறார்.

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்றன

ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவமும் அமெரிக்காவில் நிகழ்ந்தது. விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க - அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் 7 முறை சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 குண்டுகள் ஜேக்கப் உடல் மீது பாயந்தது. உடனடியாக அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.

ஜேக்கப் பிளேக் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணம் உட்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையில் முடிந்த வண்ணம் உள்ளது. 

இதற்கிடையில், நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதியான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நடைபெற உள்ள தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில், பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜேக்கப் பிளேக் மீது தாக்குதல் நடந்த மாகாணமான விஸ்கான்சினுக்கு குடியரசுக் கட்சி வேட்பாளரும் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் சென்றார்.

அங்கு தனது ஆதரவாளர்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் பின்னர் ஜேக்கப் பிளேக் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து விஸ்கான்சின் பகுதியில் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார்.

பின்னர் பேசிய டிரம்ப் போராட்டக்காரர்களை கண்டிக்கும் விதமாக ‘இது ஒரு உள்நாட்டு பயங்கரவாதம்’ என விமர்சனம் செய்தார். மேலும், அவர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த ஜாக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்திக்க மறுத்துவிட்டார். 

ஜனாதிபதி டிரம்ப் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த ஜேக்கப்பின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. ஜேக்கப்பின் குடும்பத்தினரை டிரம்ப் சந்திக்காததற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். 

இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 

இந்த பிரச்சாரத்தின்போது பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கினோஷா நகரை சேர்ந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜோ பைடன் சந்திக்க உள்ளதாக ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தெரிவித்துள்ளது.

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜோ பைடன் சந்திக்கும் நிகழ்வு அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad