காணி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு அதிக பயன்தரக் கூடியது - சட்டத்தரணி மயூரி ஜனன் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

காணி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு அதிக பயன்தரக் கூடியது - சட்டத்தரணி மயூரி ஜனன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காணி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி ஆவணமற்ற ரீதியில் அரச காணிகளைப் பயன்பாட்டுக்கு உட்படுத்தி வரும் மக்களுக்கு அதிக பயன்தரக் கூடியது என மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 3 நாள் வதிவிடக் கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி பயிற்சிக் கூடத்தில் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே. முத்துலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை 17.09.2020 இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் செயற்பாட்டாளர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி மயூரி மேலும் தெரிவித்ததாவது, சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் செயற்பாடுகளில் பிரதானமானது சூழலைப் பாதுகாப்பதாகும் இயற்கையோடு தொடர்புடைய அனைத்து விடயங்களிலும் காலத்துக்கேற்ப ஈடுகொடுக்கக் கூடிய வகையில் எங்களுடைய செயற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நாட்டின் நடைமுறைகள் சட்டதிட்டங்கள் எல்லாமே துரித கதியில் மாற்றம்மடைந்து கொண்டு வருவதால் பொதுமக்களும் அந்த நடைமுறைகளுக்கேற்ற வகையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

2020 செப்ரெம்பெர் 10ஆம் திகதி காணி அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் காணியற்ற மக்களுக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியது. காணியற்றவர்களுக்கு அது மிகவும் நம்பிக்கை தரக் கூடிய வர்த்தமானி அறிவித்தலாகும்.

அதாவது அரச காணிகளில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் குடியிருந்து அபிவிருத்தி செய்து பயன்பாட்டுக்கு வைத்திருப்பவர்களுக்கு அது நன்மை தரக் கூடியது.

1292/36ஆம் இலக்கத்தில் காணி அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்வருகின்ற நவம்பர் மாதத்திற்கு முன்னராக காணிக் கச்சேரியை வைத்து மக்களது காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு பயனளிக்கக் கூடியது. இந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி தங்களது காணிக்கான உரித்தாவணம் இல்லாப் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு கொள்ள முடியும்.

எனவே மக்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் ஏற்றவாறு செயற்பாடுகளை மாற்றிக் கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad