இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடம்

என்னையும், பிள்ளைகளையும் அச்சுறுத்தி வருவது ஜனாதிபதி மைத்திரியின்  ஆலோசகரே... அம்பலப்படுத்தினார் சந்தியா எக்னெலிகொட. - Madawala News Number 1  Tamil ...
(நா.தனுஜா)

உலகலாவிய ரீதியில் இதுவரையில் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களை உள்ளடக்கி சர்வதேச நாடுகளைச் சேர்ந்த முன்னணி ஊடகவியலாளர்கள் கூட்டணியினால் வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

சர்வதேச ரீதியில் தலைசிறந்த பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பிரசுரகர்த்தாக்கள் தமக்கு இருக்கக்கூடிய சமூகத் தொடர்புகளைப் பயன்படுத்தி உலகலாவிய ரீதியில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படும் ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கில் ஒன்றிணைந்து 'சுதந்திர பத்திரிகையாளர் கூட்டணி' என்ற பெயரில் ஒரு அமைப்பாக இயங்கி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை முன்னிட்டு '10 மோஸ்ட் ஏர்ஜென்ட்' என்ற தலைப்பில் பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அடக்கு முறையை அனுபவித்துவரும் - நீதியைக்கோரும் 10 ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது.

இந்தப் பட்டியல், உலகலாவிய ரீதியில் காணாமல்போன ஊடகவியலாளர்கள் மீதே அதன் கவனத்தைக் குவித்திருக்கிறது. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அண்மைய தரவுகளின்படி உலகலாவிய ரீதியில் 64 ஊடகவியலாளர்கள் காணாமல்போயிருக்கின்றார்கள்.

இந்நிலையில் சுதந்திர பத்திரிகையாளர் கூட்டணியினால் வெளியிடப்பட்ட மேற்படி பட்டியலில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி காணாமல்போன இலங்கையைத் தளமாகக்கொண்டு பணியாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் இருக்கின்றது. 

எக்னெலிகொட தொடர்பில் சுதந்திர பத்திரிகையாளர் கூட்டணியினால் கூறப்பட்டிருப்பதாவது இலங்கையின் இணைய ஊடகமான 'லங்கா ஈ-நியூஸ்' செய்திச் சேவையைச் சேர்ந்த ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட சுமார் பத்தரை வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டிலிருந்து கிளம்பியபோதே அவரது மனைவியும் இரண்டு இளம் பிள்ளைகளும் அவரைக் கடைசியாகப் பார்த்திருக்கின்றார்கள். 

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தமைக்காக லங்கா ஈ-நியூஸின் ஊடகவியலாளரான அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார்.

எக்னெலிகொட கடத்தப்பட்டமையுடன் 7 பேர் தொடர்புபட்டிருப்பதாக கடந்த வருடம் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றஞ்சாட்டியிருந்ததுடன் அது குறித்த விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன. 

எனினும் கடந்த 6 மாத காலத்தில் இந்த வழக்கின் சாட்சிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதுமான அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்பு என்பன அதிகரித்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, ஏழு மாதங்களுக்கு முன்பு பெருவில் காணாமல் போயிருந்த டேய்ஸி லிசெத் மினா ஹுவாமன் (Daysi Lizeth Mina Huamán ) என்பவரின் பெயர் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருவின் காங்கிரஸ் தேர்தல்களில் வாக்களித்த பின்னர் தனது காதலனைச் சந்திக்கச் செல்லும் வழியில், மத்திய நகரமான அயாகுச்சோவில் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான கேபிள் VRAEM இற்காக ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தபின், ஜனவரி 26 ஆம் திகதி டெய்சி லிசெத் மினா ஹுவாமன் காணாமால் போயிருந்தார்.

மேலும், சிரியாவில் ஐந்தரை ஆண்டுக்கு முன்பு சிறையில் இருந்து கடத்தப்பட்டிருந்த ஃபர்ஹாத் ஹமோ (Farhad Hamo) என்பவரின் பெயர் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர், மார்ச் 2015இல் ரக்காவின் சிறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad