அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - சாணக்கியன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - சாணக்கியன்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மக்களால் நேற்றுமுன்தினம் (14) ஏற்பாடு செய்யப்பட்ட வரேவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அங்குமிங்கும் இருப்பதால் பலமைடைவது சிங்களவர்கள்தான். தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பின்னர் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் அளவிற்கு மாறலாம்.

நான் விமர்சனங்களால்தான் வளர்ந்தவன். என்னை தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததன் விளைவாகத்தான் மக்கள் பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கியிருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி என்னை பாராளுமன்ற சபாநாயகர் குழுவிலும், கோப் குழுவிலும் ஒரு உறுப்பினராக அதுவும் ஒரே ஒரு தமிழனாகவும் என்னை தெரிவு செய்துள்ளார்கள். இதற்கும் என்னை விமர்சிக்கின்றார்கள்.

எனக்கு ஒரேஒரு எண்ணம் மட்டும்தான் உள்ளது. மக்களுக்கு தேவையான சேவைகளை புரிய வேண்டும். அதற்காக நாங்கள் பல வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செய்வதற்காக திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் அரசாங்கத்துடன் பேசி செய்ய வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.

இதன்போது கோட்டைக்கல்லாறு விளையாட்டு கழகங்கள், கிராம அமைப்புக்கள் இணைந்து அமோக வரவேற்பளித்தனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி.ரஞ்சினி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

பெரியபோரதீவு நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad