சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தடுத்து வைப்பதற்கான உத்தரவு நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தடுத்து வைப்பதற்கான உத்தரவு நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் விசாரணை குறித்த இறுதி அறிக்கையை, 2 அல்லது 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான், சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்றையதினம் (16) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

இது குறித்தான வழக்கு கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் அஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஆராய்ந்த நீதவான், இன்றையதினம் (16) குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையிலான அதிகாரத்திற்கு அமைய, வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், அவரை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனவும், எனவே அவரை விடுவிக்குமாறும் தெரிவித்து, அவரது சட்டத்தரணி கணேஷ்வரி முத்துசாமி தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தடுத்து வைப்பதற்கான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு, 150 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(சுபாஷினி சேனாநாயக்க)

No comments:

Post a Comment

Post Bottom Ad