உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமைக்கான பிரதான காரணம் அதிகார முரண்பாடு என்கிறார் ஜி.எல். பீறிஸ் - News View

Breaking

Post Top Ad

Monday, September 28, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமைக்கான பிரதான காரணம் அதிகார முரண்பாடு என்கிறார் ஜி.எல். பீறிஸ்

(இராஜதுரை ஹஷான்) 

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் முத்துறையினருக்கிடையில் ஏற்பட்ட அதிகார முரண்பாடு, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தடுக்க முடியாமைக்கான பிரதான காரணம். 19 ஆவது திருத்தத்தை கொண்டு தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் ஆகியவற்றை பலப்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் நாட்டுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாறாக பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன. 

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கீரியும் பாம்பும் போல முரண்பட்டுக் கொண்டதால் அரச அதிகாரிகளால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். 

குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என, விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

மைத்திரி - ரணில் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் பிரதான காரணியாக இருந்தது. இவ்வாறான நிலை மீண்டும் தோற்றம் பெற கூடாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தற்துணிவுடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே 20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad