முஸ்லிம்களையும் ஏனைய சமூகத்தவரையும் புறக்கணிப்பதாகவே அமையும், இலங்கை அரசாங்கத்திற்கு அர்ப்பணிப்பு இல்லை : ஐ.நா.வின் முன்னாள் விசேட அறிக்கையாளர் - News View

Breaking

Post Top Ad

Saturday, September 12, 2020

முஸ்லிம்களையும் ஏனைய சமூகத்தவரையும் புறக்கணிப்பதாகவே அமையும், இலங்கை அரசாங்கத்திற்கு அர்ப்பணிப்பு இல்லை : ஐ.நா.வின் முன்னாள் விசேட அறிக்கையாளர்

இலங்கையில் இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு செயற்பாட்டை பொறுத்த வரையில் அரசாங்கத்தின் தரப்பில் அர்ப்பணிப்பு இல்லாததைத் தவிர அதனை முன்னெடுப்பதில் வேறெந்தத் தடைகளும் இல்லை என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப் தெரிவித்திருக்கிறார். 

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப்பின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையில், இலங்கையில் இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு செயற்பாட்டை பொறுத்த வரையில் அரசாங்கத்தின் தரப்பில் அர்ப்பணிப்பு இல்லாததைத் தவிர வேறெந்தத் தடைகளும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

'இடைக்கால நீதிப் பொறிமுறையைத் திட்டமிடுவதிலும் செயற்படுத்துவதிலும் இலங்கை அரசாங்கம் மிகவும் மெத்தனமாக இருப்பது மாத்திரமன்றி, அதன் நடைமுறைகளுக்கான முழுமையான உரித்துடைமையை பொறுப்பேற்பதற்கும் தவறியிருக்கிறது' என்றும் ஐ.நா விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். 

உண்மைகளைக் கண்டறிதல், நீதி வழங்கல், இழப்பீடு வழங்கல், உத்தரவாதமளித்தல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் அடைந்து கொண்டிருக்கும் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய வன்முறைகளுக்கு நிவாரணமளிக்கக் கூடிய முறைகள் குறித்து அரசாங்கத்திற்கும் இலங்கைச் சமூகத்திற்கும் ஆலோசனைகளை வழங்கல் ஆகிய நோக்கங்களுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 - 23 ஆம் திகதி வரை அரசாங்கத்தின் அழைப்பையேற்று, ஐ.நா விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். 

மனித உரிமைகள் விவகாரத்தில் பகுதியளவு இணக்கப்பாடுடைய வரலாற்றையே இலங்கை கொண்டிருக்கிறது. எனினும் உண்மையில் அது முற்றிலும் இணக்கப்பாடற்ற ஒரு நிலையேயாகும். 

அதேவேளை இடைக்கால நீதிப் பொறிமுறை பற்றி விவாதிக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரினால் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டது போன்று பேசப்படுகின்றது. அவ்வாறு செய்வது போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் ஏனைய சமூகத்தவரையும் புறக்கணிப்பதாகவே அமையும் என்றும் பாப்லோ டி கிறீப் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad