வடக்கில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுகின்றமை குறைந்து செல்வதால் இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் - வைத்திய கலாநிதி நிமால் கிஸ்ரொபல் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

வடக்கில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுகின்றமை குறைந்து செல்வதால் இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் - வைத்திய கலாநிதி நிமால் கிஸ்ரொபல்

வடக்கில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுதல் குறைகிறது- இனப் பரம்பல்  பாதிக்கும்- கலாநிதி நிமால் கிஸ்ரொபல் | Athavan News
வடக்கு மாகாணத்தில் பொதுவாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுகின்றமையானது குறைந்து செல்கின்றமையால் எமது இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் எனவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டை வற்புறுத்துவதில்லை என்றும் தாய், சேய் குடும்பநல மருத்துவர் வைத்திய கலாநிதி நிமால் கிஸ்ரொபல் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டில் ஐந்து பிள்ளைகளுக்கு மேல் பெற்ற குடும்பங்களுக்கான சத்துணவு வழங்கும் விசேட வேலைத் திட்டத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “இலங்கையில் மற்றைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில்தான் தாய்மார் போசனை குறைவாக காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக 50 வீத கர்ப்பவதிகளுக்கு குருதிச்சோகை நோயானது ஏற்படுகின்றது.

இதற்கு, முக்கியமான காரணங்களில் ஒன்று போசனைக் குறைபாடாகும். ஆகவே அவ்வாறான தாய்மார் ஒவ்வொரு பிள்ளைகளையும் பெறும்போது இந்தப் போசனைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துச் செல்லும்.

எமது மாவட்டமானது மற்றைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது வறுமையான மாவட்டமாகும். இந்த போசனை குறைபாட்டிலிருந்து தாய்மாரை மீட்கும் பொறுப்பு எம் அனைவருக்குமுரியது. இவ்விடயம் தனியே சுகாதாரத் துறையினருக்கு மாத்திரமல்ல. அனைத்து அரச, அரச சார்பற்ற துறையினரும் இணைந்து கண்டறிய வேண்டிய ஒன்றாகும்.

அந்த வகையில் இன்று கரைச்சி பிரதேச சபையானது ஏற்படுத்தியுள்ள இந்தத் திட்டமானது பாராட்டுக்குரியது. இந்தத் திட்டமானது ஐந்து பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கென ஆரம்பித்தது சிறந்தது. ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களாக இங்கு உள்ளவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.

இவ்வாறான திட்டங்களை இரண்டு பிள்ளைகளிலிருந்து மூன்றாவது பிள்ளையை பெறுகின்றவர்களுக்கும் வகுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே எமது சமூகத்தில் வினைத்திறனாக இத்திட்டத்தை கொண்டுசெல்ல முடியும். இதன்மூலம் நாங்கள் எதிர்பார்க்கின்ற பெறுமதிகளைப் பெறமுடியும்.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டை வற்புறுத்துவதில்லை. அதிலும் குறிப்பாக நிரந்தர கட்டுப்பாட்டு முறைகளை இப்போது நாங்கள் செய்வதில்லை. மருத்துவ காரணங்கள் இருந்தால் மாத்திரமே நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பரிந்துரைக்கின்றோம்.

அது தவிர்ந்து இரு பிள்ளைகளுக்கான இடைவெளியாக 2 வருடங்களை மாத்திரமே தற்காலிக குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக பரிந்துரைக்கின்றோம். குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வேலைத் திட்டங்களையும் நாங்கள் மேற்கொள்வதற்கு எண்ணியுள்ளோம்.

எமது மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்வதனால் இவ்வாறான விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். வடக்கு மாகாணத்தில் பொதுவாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுகின்றமையானது குறைந்து செல்கின்றது.

இது எமது இனப் பரம்பலை நிச்சயமாகப் பாதிக்கும். இவ்வாறான பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கு எதிர்காலத்தில் சுகாதாரத் துறை என்ற வகையில் பூரணமாக ஒத்துழைப்பு வழங்கப்படும்” என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad