தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லை : புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முயற்சி - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லை : புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முயற்சி

(செ.தேன்மொழி) 

ஜனாதிபதிக்கு தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது நம்பிக்கை இல்லாததன் காரணமாகவே அனைத்து அதிகாரங்களையும் தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்ட்டர் அப்புஹாமி தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆளும் தரப்பினர் மத்தியிலேயே தற்போது குழப்பங்கள் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி தன்னை சுற்றியுள்ளவர்கள் மீது நம்பிக்கை கொள்ளாது இருக்கின்றார். அதனாலேயே அவரே நேரடியாகச் சென்று நாட்டு மக்களை சந்தித்து வருகின்றார். 

அவருக்கு தனது தரப்பு எம்.பிக்கள் மீது நம்பிக்கை இல்லாததனாலேயே அனைத்து அதிகாரங்களையும் தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். அதற்கமையவே அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கான சட்டமூலத்தையும் முன்வைத்துள்ளார். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் பிரதமரின் அதிகாரங்கள் இல்லாமல் போகும். அதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மறைமுகமாக 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார். அவரைப்போன்று ஆளும் தரப்பு எம்.பிக்கள் சிலரும் இந்த திருத்தத்தை புறக்கணிப்பதாக எம்மிடம் கூறி வருகின்றனர். 

இந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாடு பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். சிங்கள பௌத்தம் தொடர்பில் அக்கறையுடன் பேசி வந்தவர்கள். இன்று புலம்பெயர் தமிழர் அமைப்பினருக்கும் ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். 

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைமை ஏற்பட்டால், புலம்பெயர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நாட்டின் அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பல போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

No comments:

Post a Comment