குழந்தையை கிணற்றுக்குள் வீசியது நானே - தாயின் வாக்குமூலத்தில் காரணம் வெளியானது - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

குழந்தையை கிணற்றுக்குள் வீசியது நானே - தாயின் வாக்குமூலத்தில் காரணம் வெளியானது

மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயார் சந்தேகத்தின் பேரில் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி இரவு மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக 45 நாள் கொண்ட ´கோஷனி´ என்ற சிசு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மூத்த பிள்ளைக்கு இரண்டரை வயது எனவும் அவர் தொடர்ந்து தாய்ப்பால் குடித்து வந்துள்ளதாகவும் அந்த நிலையில் இரண்டாவது பிள்ளை கருவுற்று பிறந்த பின் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளதனால் பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பால் வழங்கும் போது மூத்தபிள்ளை என்னை முறைத்து பார்ப்பதுடன் தந்தையிடம் அம்மா தன்னை கவனிப்பதில்லை என தெரிவித்து வந்துள்ளதாகவும் குறித்த தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மூத்த பிள்ளை என்னிடம் வருவது குறைவடைந்துள்ளது. இதனால் நான் குழப்பமடைந்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 15 திகதி சம்பவ தினமான மாலை வீட்டில் எனது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கோவிலுக்கு சென்ற சமயம் நான் தனிமையில் இருந்த போது கட்டிலில் படுத்திருந்த குழந்தையின் வாயில் துணியை திணித்த பின் வீட்டின் முன்பகுதியில் இருந்த கிணற்றில் குழந்தையை வீசினேன்.

பின்னர் குழந்தை காணாமல் போயுள்ளதாக தெரிவித்தேன் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகநபரான பெண் தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த தாயாரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad