காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கவும் - காதர் மஸ்தான் - News View

Breaking

Post Top Ad

Friday, September 18, 2020

காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கவும் - காதர் மஸ்தான்

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக்காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்தார். 

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், எமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சனை இருக்கின்றது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சனைகளே அதிகமாகவுள்ளது. அத்துடன் பல வருடங்களாக இருக்கின்றவர்களுக்கு அந்த காணிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றது. 

இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவே ஜனாதிபதி செழிப்பின் பார்வை என்ற செயற்றிட்டத்தின் ஊடாக மக்கள் வீடுகள் கட்டியிருந்தாலும் சரி விவசாய காணிகள் மற்றும் தோட்டக் காணிகளானாலும் சரி மக்களின் பாவனையில் நீண்ட காலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்களை இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். 

இதற்கான விண்ணப்பபடிவங்களை எமது அலுவலகத்திலும் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதுடன் காணி ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர் ஊடாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற முறையில் எங்களுக்கும் பாரிய பொறுப்புள்ளதால் மாவட்ட அரசாங்க அதிபர்களை தொடர்புகொண்டு மிக விரைவாக கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்தி விண்ணப்பங்களை பெறுமாறு தெரிவித்துள்ளேன். 

மக்களும் 30 ஆம் திகதிக்கிடையில் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி பிரதேச செயலகங்களில் வழங்குமாறும் கோருகின்றேன். மக்களுக்கான சேவைகள் விரைவாக சென்றடைந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் எண்ணமாக இருக்கின்றது. 

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad