எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : இந்திய பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : இந்திய பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறிவந்த நிலையில், கடந்த 24ம் திகதி அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. டொக்டர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி 25ம் திகதி மதியம் காலமானார். 

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பெரும்பாலான மாநில முதல்வர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழக அரசின் அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

அந்த வகையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மொழி பாகுபாடு இன்றி இந்தியாவில் பல மொழிகளில் பாடியுள்ளார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கோனேட்டம் பேட்டையாகும். 

ஆந்திராவில் பிறந்து மக்களின் உள்ளங்களை கவர்ந்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 50 ஆண்டுகள் இசைத்துறைக்கு சேவையாற்றியதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். 

50 ஆண்டுகளாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

முன்னதாக கங்கை அமரன், எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க நிச்சயம் முயற்சி செய்வேன் என்று தெரிவித்திருந்தார். 

அதேபோல், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர்களான அர்ஜுன், விவேக், ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

எஸ்.பி. பாலசுப்ரமணியம் நாற்பதாயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, பிலிம்பேர் விருது, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் மாநில விருதுகள், தமிழக அரசின் கலைமாம்மணி விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment