இலத்திரனியல் கழிவுப் பொருட்களை அகற்ற விசேட நடவடிக்கை - இலங்கையிலுள்ள ஏதேனுமொறு தபால் அலுவலகங்களில் கையளிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

இலத்திரனியல் கழிவுப் பொருட்களை அகற்ற விசேட நடவடிக்கை - இலங்கையிலுள்ள ஏதேனுமொறு தபால் அலுவலகங்களில் கையளிக்கலாம்

(நா.தனுஜா) 

இலத்திரனியல் கழிவுப் பொருட்கள்களை அற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில் எதிர்வரும் 5 - 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பாவனைக்கு உதவாத இலத்திரனியல் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கான செயற்திட்டமொன்று மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் இலங்கைத் தபால் திணைக்களம் ஆகியவற்றினால் கூட்டாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

சர்வதேச தபால் தினமாக ஒக்டோபர் 9 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சின் கீழான மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் இலங்கைத் தபால் திணைக்களம் என்பன இணைந்து இம்மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தினை தேசிய இலத்திரனியல் கழிவுப் பொருள் முகாமைத்துவ வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளன. 

அதன்படி 'மூச்சுவிடும் நாடு - இலத்திரனியல் கழிவுப் பொருட்கள் அற்ற இலங்கை' எனும் தொனிப்பொருளில் மேற்படி ஒரு வார காலத்தினுள் நாடு முழுவதிலும் இலத்திரனியல் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் 5 - 10 ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் பொதுமக்கள் தமது வீடுகளிலுள்ள இலத்திரனியல் கழிவுப் பொருட்களை நாடு முழுவதிலும் அமைந்துள்ள தபால் அலுவலகங்களில் ஏதேனுமொன்றில் கையளிக்க முடியும். 

நாடளாவிய ரீதியிலுள்ள 653 தபால் அலுவலகங்களும் இந்த செயற்திட்டத்திற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட சி.ஆர்.ரி எனப்படும் கதிர்க் குழாய்களைக் கொண்ட தொலைக்காட்சி இயந்திரங்கள் மற்றும் கணினி, ரியூப் மின்குமிழ், வர்த்தகக் குறியீடு இல்லாத மற்றும் வர்த்தகக் குறியீடு அழிவடைந்த சி.எப்.எல் மின்குமிழ், குளிர்சாதனப் பெட்டி, மணல் மற்றும் களிமண் போன்றவை படிந்துள்ள உபகரணங்கள் ஆகியவை தவிர்ந்த ஏனைய சகல வீட்டு இலத்திரனியல் கழிவுப் பொருட்களும் இந்த செயற்திட்டத்தின் கீழ் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். 

அதன்படி பொதுமக்கள் தமது வீடுகளில் மீள்பாவனைக்கு உதவாத தொலைக்காட்சி, வானொலி, மின் விசிறி, கணினி, மடிக்கணினி, மின்னேற்றி (சார்ஜர்), தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, தொலைநகல், கிரைன்டர், ரைஸ் குக்கர், அச்சு இயந்திரம், துணி துவைக்கும் இயந்திரம், வளிச்சீராக்கி (ஏ.சி), இறுவட்டுக்கள் (சி.டி, டி.வி.டி), மின்கேத்தல், மின் ஹீட்டர், மின்னடுப்பு, மின் மற்றும் இலத்திரனியல் விளையாட்டுப் பொருட்கள், மின் தேகப்பயிற்சி இயந்திரம், வேறு இலத்திரனியல் உபகரணங்கள் இருப்பின் அவற்றை அண்மையிலுள்ள தபால் நிலையங்களில் கையளிக்க முடியும். 

இவ்வாறு சேகரிக்கப்படும் இலத்திரனியல் மற்றும் மின்னியல் உபகரணங்கள் இலத்திரனியல் மற்றும் மின்னியல் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கும், முறையாக அகற்றுவதற்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற 'பாதிப்பான கழிவுப் பொருள் முகாமைத்துவ அனுமதிப்பத்திரம்' பெற்றுள்ள நிறுவனங்களின் ஊடாக மாத்திரமே முறையாக அகற்றப்படும். 

எமது நாட்டிற்குள் பாதுகாப்பாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய பிளாஸ்டிக், இரும்பு போன்றவை உள்நாட்டிலேயே மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதுடன் எஞ்சிய பகுதிகள் உரிய மீள் சுழற்சி மற்றும் அகற்றல் வசதிகளைக் கொண்ட நாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படும்.

No comments:

Post a Comment