உள்நாட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உதவிகேட்டு ரஷிய ஜனாதிபதியை சந்தித்தார் பெலாரஸ் ஜனாதிபதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

உள்நாட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உதவிகேட்டு ரஷிய ஜனாதிபதியை சந்தித்தார் பெலாரஸ் ஜனாதிபதி

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி லூகாஷென்கோ ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். 

அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றி பெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

26 ஆண்டுகளாக ஜனாதிபதியாக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டை நாடான லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.

அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச் சென்றுவிட்டார். 

ஆனால் மரியா கொலிஸ்னிகோவா என்ற ஒருங்கிணைப்பாளர் மட்டும் பெலாரஸ் நாட்டிலேயே இருந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார். ஆனால், அவரை முகமூடி அணிந்த நபர்கள் கடத்திச் சென்று உக்ரைனுக்கு நாடு கடத்த முற்பட்டனர்.

ஆனால், மரியா நாடு கடத்தல் நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். இதனால், அவரை கைது செய்துள்ள பெலாரஸ் பாதுகாப்பு படையினர் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.


இதையடுத்து, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் பெலாரஸ் நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. 

போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சூழ்ச்சியே காரணம் என ஜனாதிபதி அலேக்ஸ்சான்டர் குற்றம் சுமத்தி வருகிறார். 

மேலும், தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் பெலாரஸ் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இந்த சூழ்ச்சியில் இருந்து பெலாரசை பாதுகாக்க ரஷியா உதவ வேண்டும் எனவும் அலேக்ஸ்சாண்டர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பெலாரசுக்கு தேவைப்படும்போது ராணுவ ரீதியிலான உதவிகளை செய்வதாக ரஷிய ஜனாதிபதி புதின் உறுதியளித்தார். 

இதனால், உள்நாட்டில் நடைபெற்று வந்த போராட்டங்கள் அமெரிக்கா, ரஷியா இடையேயான பனிப்போரை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில், உள்நாட்டில் தேர்தல் நிறைவடைந்து மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், போராட்டங்கள் நடைபெறத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக பெலாரஸ் ஜனாதிபதி நேற்று வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். 

உள்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் ஜனாதிபதி அலேக்ஸ்சாண்டர் நேற்று ரஷிய நாட்டிற்கு சென்றார். அந்நாட்டின் சோச்சி நகரில் உள்ள ஜனாதிபதியின் தனி குடியிருப்பு பகுதிக்கு சென்ற அலேக்ஸ்சாண்டர் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

4 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பொலாரசில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாகவும் ரஷியா உதவ வேண்டும் எனவும் ஜனாதிபதி புதினிடம் அலேக்ஸ்சாண்டர் வேண்டுகோள் விடுத்தார். 

இதையடுத்து, பெலாரசின் பொருளாதார பிரச்சனைகளை சரிகட்ட உடனடியாக 1.5 பில்லியன் டொலர்கள் கடனுதவி வழங்குவதாக ரஷிய ஜனாதிபதி புதின் உறுதியளித்தார்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க உள்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என அலேக்ஸ்சாண்டருக்கு ரஷிய ஜனாதிபதி புதின் ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி பதவி விலகக்கோரி 1 மாதத்திற்கு மேலாக பெலாரசில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி அலேக்ஸ்சாண்டர் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்தித்துள்ள சம்பவம் அந்நாட்டு அரசியல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad